மெரினா போராட்டம் குறித்து எழுதத் தொடங்கியபோது... அதனை வால்ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்டத்துடன் ஒப்பிட்டிருந்தேன்... மீண்டும் அங்கிருந்தே தொடங்குகிறேன்...
இது வால்ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்டம், “நவம்பர் 18-ம் தேதி, நள்ளிரவு 2 மணிக்கு போராட்டக் களத்துக்குள் நுழைந்த காவல் துறையினர், எவ்விதக் காரணமுமின்றிப் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்... மிளகுத்தூள் தூவினர்.”
ஜல்லிக்கட்டு மெரினா போராட்டம், “அதிகாலை 4.30 மணிக்கு மெரினாவுக்குள் புகுந்த காவல் துறையினர், போராட்டக்காரர்கள் சொன்ன எந்த நியாயங்களையும் கேட்காமல்... அவர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்... வாகனங்களை எரித்தனர்.”
சரி... இந்த இரண்டு ஓப்பீடுகளையும்... அதனுள் பல்வேறு அடுக்குகளில் ஒளிந்திருக்கும் அரசியலையும் காண்பதற்கு முன்... சந்தேகமின்றி நீங்கள் பெற்றிருக்கும் வெற்றியைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.
“சந்தேகமே இல்லை... நீங்கள் வென்றிருக்கிறீர்கள்!”
“என்ன வெற்றியா...? போலீஸ் கடுமையாக நம்மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு இருக்கிறது, போராட்டக்காரர்களைத் தேசத் துரோகிகளாகச் சித்தரிக்கிறது... ஹூம். இது எப்படி வெற்றியாகும்...?” என்று சலித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் உண்மையாக வென்று இருக்கிறீர்கள். ஆம்... வரலாறு நெடுகிலும் தோற்று... தோற்று... உண்மையாக வெல்லும்போதுகூட நாம் பெறும் வெற்றி மீது நமக்கே சந்தேகம் வருகிறது. இந்தமுறை சந்தேகிக்கத் தேவையில்லை. யார் என்ன சொல்லி திசைமாற்றப் பார்த்தாலும்... நீங்கள் வென்றிருக்கிறீர்கள்...!
‘ஜல்லிக்கட்டு’ என்ற ஒற்றை விஷயத்தை வைத்துத் தட்டையாகச் சொல்லவில்லை. உங்களது ஒருங்கிணைப்பை, களத்தில் உறுதியோடு நின்றதை... மெரினாவில் ‘ஜல்லிக்கட்டு’ என்ற ஒரு குறியீட்டுச் சொல்லை வைத்துத் தமிழகத்தை வஞ்சிக்கும் பல்வேறு அரசியல் பேசியதை, அரசு உங்கள் மீது வன்முறையை ஏவும்வரை நீங்கள் அறத்தோடு நின்றதை... இதையெல்லாம் வைத்துச் சொல்கிறேன், நீங்கள் வென்றிருக்கிறீர்கள். முதலில், உங்கள் வெற்றியைக் கொண்டாடுங்கள்.
காவல் துறையின் அடக்குமுறையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள். பின், இந்த வெற்றிச் செய்தியைப் பரப்புங்கள். உங்கள் எதிரிகள் நீங்கள் தோற்க வேண்டுமென்றுதான் விரும்பினார்கள்... வெற்றி ஒரு போதை. இந்த முறை வென்றால், நீங்கள் இனி தமிழகத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் களம் காண்பீர்கள். அதனால், நீங்கள் தோற்க வேண்டுமென்று விரும்பினார்கள். ஆனால், நீங்கள் அதையெல்லாம் கடந்து வென்றிருக்கிறீர்கள். இந்த வெற்றிதான் அவர்களுக்கு அச்சமே. அதனால், நீங்கள் தோல்வியுற்றதுபோல ஒரு மாயையைப் பின்னப் பார்க்கிறார்கள். நீங்கள் ஏன் அதற்கு இரையாகுகிறீர்கள்...? நீங்கள் வென்றிருக்கிறீர்கள்.
“வெற்றிக் கதையை எழுதுங்கள்..!”
உங்களை இன்முகத்துடன் போராட்டக் களத்துக்கு அனுப்பிவைத்த உங்கள் பெற்றோர்களுக்குச் சொல்லுங்கள்... “யாரையும் நம்பாதீர்கள். நாங்கள் வென்றிருக்கிறோம். உன் பிள்ளை சமூக விரோதி அல்ல... போரட்டக் களம் கண்டு வென்றவன்” என்று. உங்களைவிட அவர்கள்தான் மிகவும் சந்தோஷமடைவார்கள். தன் பிள்ளை கதாநாயகன், கதாநாயகி என்பதை எந்தப் பெற்றோர்தான் விரும்பமாட்டார்கள்...? உங்கள் வெற்றியை நினைத்து, அவர்கள் ஆன்மா சந்தோஷத்தில் தழும்பும். நாளை ஒரு போராட்டம் என்றால், உங்களை அவர்கள் வீதிக்கு அனுப்பிவைப்பார்கள். அதற்காக உங்கள் வெற்றிக் கதையை... இந்த ஏழு நாட்கள் அனுபவத்தை... இந்த எழுச்சியை அதிகம் பகிருங்கள். சமூக ஊடகங்களில் உங்கள் வெற்றிக் கணக்கை எழுதுங்கள். ‘இந்த ஏழு நாட்கள் எங்களுக்கு இவ்வளவு படிப்பினைகளைத் தந்துள்ளது. நாங்கள் இவ்வளவு கற்றிருக்கிறோம். இனி நாங்கள் எப்போதும் ஏமாறமாட்டோம்’ என்று எழுதுங்கள். உங்கள் வெற்றிதான் எதிராளிகளுக்கு அச்சத்தை விதைக்கும். அதை விதையுங்கள்.
உங்கள் எதிராளிகள்... உங்களைக் கலவரக்காரர்கள் என்று சித்தரிக்க அனைத்துக் கைங்கர்யங்களையும் மிகத் திறமையாகச் செய்யும் இந்த வேளையில்... அவர்களை எள்ளி நகையாடவாவது உங்கள் வெற்றியைக் கொண்டாடுங்கள்.
“நாங்கள் வென்றிருக்கிறோம்...” இப்போது இதை ஒருமுறை உரக்கச் சொல்லுங்கள்... அந்தச் சத்தத்தில் உங்களுக்கு எதிராகப் பின்னப்பட்ட சதி வீயூகங்கள் வெடித்து நொறுங்கட்டும்.
எழுச்சியும்... நமக்கான பாடங்களும்!
இந்த எழுச்சியும்... அது சந்தித்த ஒடுக்குமுறையும்... நமக்குச் சில பாடங்களை வழங்கி இருக்கின்றன. அது நான் ஏற்கெனவே சொன்னதுபோல, உங்கள் வெற்றியை நீங்கள் நுகரக் கூடாது என்பது. ஏழு நாட்களும் ஒரு செய்தியாளனாக அங்கேயே இருந்தவன் என்பதால், எனக்கு நன்கு தெரியும், உங்கள் மீது வன்முறையை யார் ஏவினார்கள் என்று.
நிச்சயம் அவர்களால் காத்திருந்திருக்க முடியும். அதுவும் நேற்று (23-1-17) மாலை சட்டமசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட இருந்தபோது... அவர்கள் காத்திருந்திருக்க வேண்டும். பின், ஏன் முதலில் லத்தியைச் சுழற்றினார்கள். “எங்களால் எத்தனை லட்சக் கூட்டத்தையும் லத்தியால் கலைத்துவிட முடியும்... அரசு நினைத்தால் யாரை வேண்டுமானாலும் வன்முறையாளனாகச் சித்தரிக்க முடியும்” என்பதை உணர்த்த...!
“போராட்டத்தை நீங்கள் வேண்டுமானால் தொடங்கி இருக்கலாம். ஆனால், அதை நாங்கள்தாம் முடிப்போம். அதை இப்படித்தான் முடிப்போம். வரலாறு, இதை வெற்றிப்போராட்டமாக பதிவு செய்யக் கூடாது. மெரினா பற்றி பேசினால்... புரட்சி நினைவுக்கு வரக் கூடாது. அது ஒரு வன்முறைச் சம்பவம் என்பதாகத்தான் பதியப்பட வேண்டும்” என்பதற்காகத்தான்.
இந்த அரசியலை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளுங்கள்... நீங்கள் நாளை, தமிழ்நாட்டின் இன்னொரு பிரச்னைக்காக அறவழியில் களம் காணும்போது... இதற்காகவும் திட்டம் வகுங்கள். நிச்சயம்... உங்களால் தமிழகத்தின் அரசியல் திசைவழியை மாற்ற முடியும்.
- மு. நியாஸ் அகமது
- மு. நியாஸ் அகமது
http://www.vikatan.com/news/coverstory/78623-yes-you-have-won-the-protest--jallikattu.art