வியாழன், 23 மார்ச், 2017

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்! March 22, 2017




28 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம் 

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் ஏற்பட்ட சர்ச்சைகளின் விளைவால் ஓ.பி.எஸ். அணியினர் இரட்டை இலை சின்னத்தை அவர்களுக்கே ஒதுக்க வேண்டும் என உரிமை கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். 

இதில் சசிகலா தரப்பினரும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும் அதிமுகவில் எந்த பிளவும் இல்லை எனவும் கூறி மனுதாக்கல் செய்தனர்.

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் எந்த அணியினரும் பயன்படுத்தக்கூடாது என கூறி உத்தரவிட்டுள்ளது. 

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கியுள்ளது. ஏப்ரல் மாதம் 17ம் தேதிக்குள் அதிமுகவின் இரு தரப்பினரும் உரிய ஆவணங்களை தாக்கல் செய்தால் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. 

முன்னாள் முதலமைச்சர், எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு 1988ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 28 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிமுகவில் வரலாறு திரும்புவதாகவே அரசியல் விமர்சகர்கள் மற்றும் வல்லுநர்கள் கருதுகிறார்கள், கடந்த முறை சின்னம் முடக்கப்பட்ட போது ஜெயலலிதா என்ற ஒரு முக்கிய ஆளுமை தமிழக அரசியலில் உருவானது ஆனால் இந்த முறை அப்படி யாராவாது உருவெடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.