வியாழன், 23 மார்ச், 2017

பாஜக தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு! March 23, 2017

பாஜக தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!



பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. 

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 19 பேரை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை, நீதிபதிகள், பினாகி சந்திர கோஸ், ஆர்.எப்.நாரிமன் அடங்கிய அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது.  இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என அத்வானி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை ஏற்றுகொண்ட நீதிமன்றம், இரண்டு வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. மேலும் இந்த வழக்கில் தங்கள் வாதங்களை தாக்கல் செய்யவும்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.