திங்கள், 15 மே, 2017

இந்தியா உள்ளிட்ட 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மீது இணையதள வைரஸ் தாக்குதல்! May 15, 2017




இந்தியா உட்பட உலகம் முழுவதும் 100 நாடுகளில் பல்வேறு நிறுவனங்களின் மீது இணையதள வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கான சைபர் ஆயுதங்கள், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தில் இருந்து திருடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குட்பட்ட கணினிகள் தற்காலிகமாக முடக்கப்பட்டு 300 டாலர் மதிப்புள்ள பிட்காயின்களை செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

Ransomware என்று அழைக்கப்படும் பிணைத்தொகை கேட்கும் இந்த தாக்குதல், மின்னஞ்சல் மூலமாக பரவியுள்ளன. இந்த சைபர் தாக்குதல் தொடங்கிய சில மணி நேரத்திற்குள் உலகம் முழுவதும் சுமார் 75,000 தாக்குதல்கள் வரை கண்டறியப்பட்டதாக இணைய பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட் கூறியுள்ளது. 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக மால்வேர்டெக் டிராக்கர் தெரிவித்துள்ளது.

இந்தியா, பிரிட்டன், ரஷ்யா, உக்ரைன், சீனா, இத்தாலி, எகிப்து உள்ளிட்ட, 100 நாடுகளில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் நடந்துள்ளது. ரஷ்யாவின் உள் துறை அமைச்சகம், பிரான்சின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான, ரெனால்ட் ஆகியவையும், வைரஸ் தாக்குதலுக்கு தப்பவில்லை. இந்த சைபர் தாக்குதல்களால் பிரிட்டனில் தேசிய சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மருத்துவமனைகளில் நோயாளிகளை திருப்பி அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், ஆந்திர மாநில காவல்துறையின் இணைய தொடர்புகளை மர்மநபர்கள் முடக்கியது தெரிய வந்துள்ளது. திருமலை, திருப்பதி, ஏர்பேடு, கலிக்கிரி, குண்டூர், விசாகப்பட்டிணம், விஜயநகரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கணினிகள் முடக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து மாநிலம் முழுவதும் காவல்துறையின் இணைய சேவை துண்டிக்கப்பட்டதாக திருமலை டிஎஸ்பி முனி ராமைய்யா தெரிவித்தார். கம்ப்யூட்டரில் உள்ள ஆவணங்கள் அழிக்கப்பட்டாலும், அதன் மூல ஆவணங்கள் இருப்பதால், எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அதனை மீண்டும் உள்ளீடு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஆந்திர போலீஸார் தெரிவித்துள்ளனர்.