திங்கள், 15 மே, 2017

மத்திய அமைச்சர் கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம் May 15, 2017

மத்திய அமைச்சர் கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்


பெற்று எடுக்காத பிள்ளைக்கு பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதா? என மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக முதல்வர், மத்திய அமைச்சர் கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2007-ல் திமுக ஆட்சியின்போது 23-வது அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார். சென்னையில் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில்கள் திமுகவுக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி எனவும் சுட்டிக்காட்டி உள்ளார். 

ஆனால், இத்திட்டத்தை தாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று “சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது போல்” பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு முதலமைச்சருக்கு கூச்சமாக இல்லையா என்று கேள்வி எழுப்பி உள்ளார். மத்தியஅமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் “மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்ற  ஜெயலலிதாவின் கனவு தற்போது நனவாகியுள்ளது” என கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

எனவே, “பெற்று எடுக்காத பிள்ளைக்கு” பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபடாமல், மெட்ரோ ரயில் திட்டம் திமுகவின் பிள்ளை என்பதை உணர வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் எஞ்சியுள்ள மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Related Posts: