ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என காத்துக்கிடந்த அவரது தீவிர ரசிகர்களே தற்போது அவரது அரசியல் பிரவேசத்தை விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
ரஜினியின் தீவிர ரசிகராக நாம் அறிந்த ஆர்.ஜே.பாலாஜி கூட தற்போது ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை என கருத்து தெரிவித்துள்ளது ஒரு சான்று. ஒரு காலத்தில் ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார் என காத்துக்கிடந்த ரஜினி ரசிகர்களும் ஒரு நடிகராகவும் நல்ல மனிதராகவும் அவர் மீது மதிப்பு வைத்திருந்த பொதுமக்களும் தற்போது ஏன் அவரது அரசியல் பிரவேசத்தை ரசிக்கவில்லை என்பதை ரஜினி அறிந்து சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறார் ரஜினி.

ரஜினி அரசியலுக்கு வருவார் என காத்திருந்து இளமை, பணம், சந்தோஷம் என அனைத்தையும் தொலைத்துவிட்டு அனுபவத்தினாலும் புத்தக வாசிப்பாலும் இந்த வியாபாரிகளிடமிருந்து ஒதுங்கிவிட்டதாகவும் நொறுங்க சம்பாதித்துவிட்டுத்தான் அரசியலுக்கு வருவேன் என உறுதியாக அப்போழுதே கூறியிருந்தால் நாங்கள் பணத்தையும் இளைமையையும் இழந்திருக்க மாட்டோம் என முகநூலில் குமுறியுள்ளார் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர்.
அப்படியே அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்தவர், வயது இருக்கும்போதே வந்திருக்க வேண்டியது தானே? வயது முதிர்ந்த பிறகு தற்போது ஏன் வர நினைக்கிறார்? அப்படியே வர நினைத்தாலும் அதற்கான அடித்தளமாக என்ன செய்திருக்கிறார் ரஜினி? எனவும் கேள்வி எழுப்புகின்றனர் அவரது ரசிகர்கள்.

தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்த ரஜினிகாந்திற்கு பாபாவிற்குப் பிறகு குசேலன், கோச்சடையான், லிங்கா என தோல்விகள் குவியத் தொடங்கிவிட்டன. எனவே படம் எப்படி இருந்தாலும் ரஜினி நடித்திருக்கிறார் என்பதற்காக ஓடும் காலங்கள் மாறிவிட்டன என்பதை ரஜினி உணர்ந்துவிட்டதால் நன்கு சம்பாதித்து முடித்துவிட்ட காரணத்தால் தற்போது அரசியலுக்கு வர நினைக்கிறார் என்ற எண்ணமும் அவர் மீது ரசிகர்களுக்கு அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.
அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வந்திருந்தாலாவது ரசிகர்கள் சற்று ஆதரவு தெரிவித்திருப்பார்கள்.
ஆனால், ரஜினியோ காவிரி விவகாரம், தமிழ் இனப்படுகொலை, முல்லைப் பெரியாறு விவகாரம் என எந்த ஒரு அரசியல் சார்ந்த நிகழ்விலும் வாய்ஸ் கொடுக்காத ரஜினி திடீரென நினைத்தவுடன் அரசியலுக்கு வந்தால் நாங்கள் ஆதரிக்கனுமா? என்ற கேள்வியும் மக்கள் மனதில் உள்ளது.
எனவே ரசிகர்கள் மற்றும் மக்களின் கருத்துக்களை அறிந்து பரிசீலனை செய்து பின்னர் முடிவெடுப்பது நல்லது. அல்லது தோல்வியைச் சந்திக்க நேரிடும் என ரசிகர்களே முணுமுணுக்கின்றனர்.