செவ்வாய், 16 மே, 2017

சேகர் ரெட்டி டைரியில் அனைத்து கட்சி பிரமுகர்களின் பெயர்கள்: சப்த நாடியும் ஒடுங்கி கிடக்கும் முக்கிய தலைவர்கள்!

சேகர் ரெட்டியின் டைரி குறிப்பில் இடம்பெற்றிருப்பவர்கள் மீது,  நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக அரசுக்கு வருமானவரி துறையினர் கடிதம் எழுதிய தகவல் அறிந்த உடனேயே, பலருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது.
சேகர் ரெட்டி டைரியே எழுதவில்லை என்று, முதல்வர் எடப்பாடி, அமைச்சர்களுக்கு ஆறுதல் கூறி தைரிய படுத்தினாலும், டைரி எழுதவில்லை என்பது உண்மைதான், டைரி போல ஒரு நோட்டில் எழுதி வைத்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சேகர் ரெட்டியின் நோட்டு புத்தகத்தில் மட்டும் 18 அமைச்சர்களின் பெயர்களுடன் முக்கிய அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சேகர் ரெட்டி வாரி வழங்கிய பணத்தில் இருந்தே பல தொகுதிகளுக்கு தேர்தலின் போது பணம் வாரி இறைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும், தமது  வியாபாரத்திற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில், அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் சேகர் ரெட்டி பணம் கொடுத்து, அவர்களிடம் பெற்றுக்கொண்டேன் என்றும் கையெழுத்து வாங்கி வைத்துள்ளாராம்.
கம்யூனிஸ்ட் கட்சியை தவிர, அனைத்து கட்சிகளையும் சேர்ந்தவர்களுக்கும், ஜாதி சங்க பிரமுகர்களுக்கும் அந்த பணம் போய் சேர்ந்துள்ளது. அந்த விவரங்களும், டைரி குறிப்பில் இடம்பெற்றுள்ளது.  
பணத்தை கொடுத்த ரெட்டி, அத்தோடு விடாமல், பணத்தை பெற்று கொண்டேன் என்றும், கையெழுத்து வேறு வாங்கி வைத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, இதனால், சேகர் ரெட்டியிடம் பணம் பெற்ற அனைத்து கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் ஆட்டம் கண்டுள்ளனர்.
குறிப்பாக, அரசியலில் தூய்மையை பற்றி அதிகம் பேசி, வேடம் போட்டு கொண்டிருக்கும் ஒரு கட்சியின் தலைமை, எங்கே தமது முகமூடி கிழிந்து விட போகிறதோ  என்று ஆடிப்போய், டெல்லிக்கு சமாதான தூது விட்டு கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், இதை வைத்து கொண்டே அனைத்து கட்சிகளையும், ஒரு கை பார்த்து விடலாம் என்பதே டெல்லியின் திட்டம். அதனால், பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சப்த நாடியும் ஒடுங்கி கிடப்பதாக தகவல்.
ஊழல், கமிஷன் என்று வந்து விட்டால், அதில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்று எந்த வித்தியாசமும் இல்லை. அளவுகளில் மட்டும் தான் வேறுபாடு. 
எனவே, சேகர் ரெட்டியின் டைரி குறிப்பை வெளியிட்டு, அனைத்து கட்சியினரின் முகத்திரையையும் கிழிக்க வேண்டும் என்பதே டெல்லியின் நோக்கம் என்று, மத்திய அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆகவே, குடியரசு தலைவர் தேர்தல் முடிந்தவுடன், ஒவ்வொரு கட்சியின் வண்டவாளமும் தண்டவாளம் ஏறலாம்? அல்லது, சரணாகதி மூலம் சிலர் தப்பித்து கொள்ளலாம் என்று தெரிகிறது என்பதே லேட்டஸ்ட் தகவல்.
source: kaalaimalar

Related Posts: