சனி, 8 ஜூலை, 2017

கதிராமங்கலத்தில் 8வது நாளாக கடையடைப்புப் போராட்டம்! July 08, 2017

கதிராமங்கலத்தில் 8வது நாளாக கடையடைப்புப் போராட்டம்!


தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் கடையடைப்புப் போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

ONGC திட்டத்திற்கு எதிராக தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 8-வது நாளாக இன்றும் கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.  இந்நிலையில் கதிராமங்கலத்தில் வணிகர்களை நேரில் சந்தித்து வெள்ளையன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கதிராமங்கலம் நிலைமை குறித்து ஆலோசனை நடத்த சென்னையில் இன்று அவசரக்கூட்டம் நடைபெறுவதாகவும், இதில் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். அந்த தேதியில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் வெள்ளையன் கூறினார். 

கதிராமங்கலம் பெரிய கடைவீதியில் நேற்று முன்தினம் குடிநீர் குழாயில் எண்ணெய் படலம் வந்ததை தொடர்ந்து அந்த குழாய் புதிதாக அமைக்கப்பட்டது. இந்த குழாயில் வரும் குடிநீரை நேற்று மாலை கதிராமங்கலத்திற்கு வந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அப்போது தண்ணீரின் நிலைமை பற்றி பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். 

கதிராமங்கலத்தில் ஒஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்த போலீசாரைக் கண்டித்து திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 

Related Posts: