திங்கள், 3 ஜூலை, 2017

மூன்றாம் பாலினத்தவருக்கு இலவசக் கல்வி! July 03, 2017

மத்திய பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தொலைதூர மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகம் மூன்றாம் பாலினத்தவருக்கு  இலவச கல்வி தர முடிவு செய்துள்ளது. 

இதற்கான அறிவிப்பாணையை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சர்மா வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, பல்கலைக்கழகத்தில் உள்ள 21 வகையான கல்வி பாடங்களையும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பெறமுடியும். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு மத்திய அல்லது மாநில அரசின் அங்கீகாரச் சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், உரிய அதிகாரியின் தகுதிச்சான்றிதழ், ஆதார் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடையாள சான்றிதழாக கொடுக்க வேண்டும். 

இந்திரா காந்தி பல்கலைக்கழகம் உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாகும். தொலைதூர கல்வி உட்பட சுமார் 30 லட்சம் மாணவர்கள் இதில் பயில்கிறார்கள். சுமார் 67 வட்டார மையங்கள் உள்ளன. ராணுவம், கடற்படை போன்றவற்றால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் வட்டார மையங்களும் இதில் அடக்கம். அறிவியல், பொறியியல், மருத்துவம், மேலாண்மை உள்ளிட்ட 21 வகையான கல்வித்திட்டங்களோடு இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய கல்வி நிறுவனத்தில் மூன்றாம் பாலினத்தருக்கு இலவச கல்வி வழங்குவது என்பது மிகவும் வரவேற்கக்கூடியதாகும். 

ஏற்கனவே 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றமும் மற்றும் கடந்த 2015ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழுவும், மூன்றாம் பாலினத்தவருக்கான கல்விவாய்ப்புகளை உறுதிசெய்யும் பொருட்டு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறிவுறுத்தியுள்ள நிலையில், அவற்றை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மூன்றாம் பாலினத்தர்கள் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.