புதன், 19 ஜூலை, 2017

கர்நாடக மாநில சிறைத்துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்! July 19, 2017




கர்நாடகாவின் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த 32 கைதிகள் தாக்கப்பட்டது குறித்து பதில் அளிக்கக் கோரி, அம்மாநில சிறைத்துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

வி.கே.சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறையில், அவருக்கு பல்வேறு விசேஷ சலுகைகள் அளிக்கப்பட்டதாக அம்மாநில சிறைத்துறை டிஐஜி ரூபா, சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்காக 2 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரூபாவுக்கு அந்த தகவலை சில சிறைக் கைதிகளே அளித்தாகத் தகவல் வெளியாகியது. மேலும், இவ்விஷயத்தில், பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளருக்கு உள்ள தொடர்பை அவர்கள் வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், சிறை கண்காணிப்பாளருக்கு எதிராக செயல்படத் துணிந்ததால், 32 கைதிகளும் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இவர்கள் அனைவரும் கடந்த 16ம் தேதி, வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். 

இதையடுத்து, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு, கர்நாடக மாநில சிறைத்துறை டிஜிபி மற்றும் ஐஜிக்கு உத்தரவிட்டு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இதனிடையே, பரப்பன அக்ரஹார சிறையில் நடந்த சம்வங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமாரை மாநில அரசு நேற்று நியமித்தது. அவர் இன்று தனது விசாரணையைத் தொடங்கினார். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது.

Related Posts: