கேரளமாநிலம் கோவளம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வின்சென்ட் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக கேரள எல்லை பகுதியான கேரள மாநிலம் பாலராமபுரம் பகுதியில் ஸ்டேஷனரி கடையை ஸ்டான்லி என்பவர் நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரபா கடையில் இருந்தபோது, அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் வின்சென்ட் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபோன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றும், பலமுறை தொந்தரவு அளித்து வந்ததாகவும், இதற்கு அப்பெண் உடன்படாததால் அவரது கடையை சில தினங்களுக்கு முன்பு குண்டர்களை வைத்து சூறையாடியுள்ளதாகவும் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த பிரபா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் வின்சென்ட் மீது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க நெய்யாற்றின்கரை டிஎஸ்பி ஹரிகுமாரை, அம்மாநில காவல்துறை நியமித்துள்ளது.