
இந்திய ராணுவத்தில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 35, 000 கோடியை அந்நிய முதலீடாக ஈர்க்கவும் அதன் மூலம் ராணுவ ஆயுத உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை இந்தியாவில் பெருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய விதிகளின்படி, டாங்கிகள், கவச டாங்கிகள், ராணுவ போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் 100% அந்நிய முதலீட்டை கொண்டு வரவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதல் விமானங்கள் மற்ற்ய்ம் ஹெலிகாப்டர் உற்பத்தியில் 76%, நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் போர்க்கப்பல் உற்பத்தியில் 51% என அந்நிய முதலீட்டு அளவை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முதலீடுகள் அனைத்தும் ‘நேரடி முதலீடுகளாக’ அனுமதிக்கப்பட உள்ளன. இந்த முதலீடுகளுக்கு அரசிடமோ, ரிசர்வ் வங்கியிடமோ முன் அனுமதி பெறத்தேவையில்லை.
இதேபோல், இந்திய ராணுவத்தில் தற்போது உள்ள இறக்குமதியின் அளவை கணிசமாகக் குறைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இந்திய போர்த்தளவாட உற்பத்தி தொழிற்கூடங்கள் உதிரிபாகங்கள் மற்றும் இணைப்பு பாகங்கள் தயாரிப்பை ஊக்குவிக்க 80 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறது. டாங்கிகள், பீரங்கி ஆகியவற்றிற்கான உதிரிபாகங்கள் இதன் மூலம் தயாரிக்கப்படும். இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் இறக்குமதியை 60%-லிருந்து, 30%-ஆக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வர இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.