புதன், 12 ஜனவரி, 2022

5 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு… 75 ஆயிரத்தை தாண்டிய கொரோனா ஆக்டிவ் கேஸ்கள்

 12 1 2022 தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 15,379 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 20 சதவீதம் உயர்ந்து 75 ஆயிரத்து 83 ஆக உள்ளது.

திங்கட்கிழமை நிலவரப்படி, கொரோனா தொற்றுக்கு 62,767பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். தினசரி இறப்பு சராசரி, 7 முதல் 9 ஆக இருந்த நிலையில்,நேற்று 10 ஆக அதிகரித்தது. வார சராசரி இறப்பு எண்ணிக்கை 12 ஆக உள்ளது.

திருநெல்வேலியில் பாதிப்பு அதிகரிப்பு

சென்னையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு திங்கட்கிழமை 6,190 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6,484 ஆக எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதே போல், கொரோனா பாதிப்பு திருநெல்வேலியில் திடீரென உச்சத்தை அடைந்துள்ளது. ஒரே நாளில் 137இல் இருந்து 479 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 23 மாவட்டங்களில், பாதிப்பு எண்ணிக்கை 12 என்கிற அளவில் கூடுதலாக பதிவாகியுள்ளது.

5 மாவட்டங்களில் 500ஐ தாண்டிய தினசரி பாதிப்பு

நேற்றைய தரவுகளின்படி, சென்னைக்கு அடுத்தப்படியாக திருவள்ளூரில் 893 பேரும், கோவையில் 863 பேரும், காஞ்சிபுரத்தில் 580 பேரும், மதுரையில் 512 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 5 மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு 500ஐ தாண்டியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

16 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மூன்று டிஜிட்களில் பதிவாகுகிறது. குறைந்தப்பட்சமாக அரியலூரில் 10 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் நேற்றை பாதிப்பு தவிர, இலங்கையில் வந்த 3 பேருக்கும், கத்தாரில் இருந்து வந்த இருவருக்கும், ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மேற்கு வங்கத்தை சேர்ந்த 18 பேர், பிகாரை சேர்ந்த 6 பேர் உட்பட 46 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

நேற்றைய இறப்பு புள்ளிவிவரம்படி, சென்னையில் 9 பேரும், திருவள்ளூரில் 4 பேரும். செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், குமரி, திருப்பூர், தஞ்சை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,886 ஆக அதிகரித்துள்ளது.

ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தம்

இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன், “மாநிலத்தில் கண்டறியப்படும் கொரோனா பாதிப்புகளில் 85 விழுக்காடு ஒமிக்ரான் தொற்று தான். அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, ஒமிக்ரான் என ரிசல்ட் வருவதற்குள், பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்துவிடுகிறார்கள். எனவே, பெரும்பாலானோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பதால், தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.

அண்டை மாநிலமான புதுச்சேரியில் 655 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 130 பேர் மருத்துவமனைகளிலும், 2,225 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சையில் உள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/covid-19-active-cases-crossed-75-thousand-in-tn-395935/