செவ்வாய், 11 ஜனவரி, 2022

28000 தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்றும் இந்திய தொல்லியல் துறை

 11 1 2022 மைசூரில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் (ASI) கல்வெட்டுகள் அலுவலகத்திலிருந்து சுமார் 28,000 தமிழ் கல்வெட்டுகள் மற்றும் ஒரு நூற்றாண்டு பழமையான கல்வெட்டுகள் தொடர்பான ஆவணங்கள் விரைவில் சென்னைக்கு மாற்றப்பட உள்ளது.

தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலின் கல்வெட்டுகளுடன் 10 மீட்டர் நீளமுள்ள மைப் பதிப்புகள் (Estampage) இந்த கலைப்பொருட்களில் அடங்கும். இந்த மைப் பதிப்புகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டது, இது நாட்டின் முதல் மைப் பதிப்புகளில் ஒன்றாகும்.

Estampage என்பது செம்பு மற்றும் கல்லில் உள்ள கல்வெட்டுகளின் பதிவுகளை மை காகிதத்தில் பெறுவதற்கான செயல்முறையாகும். 1887 இல் இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டுக் கிளை நிறுவப்பட்ட பிறகு இந்த மைப் பதிப்பு செயல்முறை தொடங்கியது.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கிளைவ்ஸ் ஹவுஸில் இந்தப் பதிவுகள் பாதுகாக்கப்படும். இதற்காக, சென்னையில் உள்ள தென் மண்டல துணை கண்காணிப்பாளர் கல்வெட்டு அலுவலகம், துணை கண்காணிப்பாளர் கல்வெட்டு அலுவலகம் (தமிழ் கல்வெட்டுகள்) என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

1880 களின் பிற்பகுதியில் தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ நினைவுச்சின்னங்கள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் ஆகியவற்றிலிருந்து முதன்முதலில் மைப் பதிப்புகள் எடுக்கப்பட்டது. நினைவுச்சின்னங்களில் உள்ள இந்த கல்வெட்டுகள் காலப்போக்கில் மறைந்துவிடும் சாத்தியம் இருப்பதால், கல்வெட்டுகளைப் பாதுகாக்க மைப் பதிப்பு செய்யப்படுகிறது. கல்வெட்டுகள் கல்வெட்டு நிபுணர்களால் படியெடுக்கப்பட்டு தொல்லியல் துறை மூலம் பதிவுகளாகப் பராமரிக்கப்படுகின்றன. 21 டிகிரி செல்சியஸூக்கும் குறைவான வெப்பநிலையில் இந்த மைப் பதிப்புகள் (எஸ்டேம்பேஜ்கள்) பராமரிக்கப்பட வேண்டும் என்று கல்வெட்டியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மைசூருவில் உள்ள கல்வெட்டு வட்டத்தில் உள்ள அனைத்து தமிழ் வாசகங்கள் மற்றும் ஆவணங்களை 6 மாதங்களுக்குள் சென்னை கல்வெட்டு கிளைக்கு மாற்றுமாறு இந்திய தொல்லியல் துறைக்கு நீதிபதி என்.கிருபாகரன் மற்றும் நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. மேலும், சென்னையில் உள்ள கல்வெட்டுக் கிளையை கல்வெட்டு கிளை (தமிழ்) என்று பெயர் மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/asi-transfer-28000-tamil-estampages-to-chennai-epigraphy-office-395327/