திங்கள், 3 ஜனவரி, 2022

நோ ஃபண்ட்… நோ அப்பாயின்ட்மெண்ட்… தமிழகத்திற்கு டெல்லி ஷாக்

 3 1 2022 இந்தியாவில் கடந்த ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் (என்.டி.ஆர்.எஃப்) கீழ் கூடுதலாக 3,000 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அதில் தமிழகத்துக்கு என்.டி.ஆர்.எஃப் வழங்கப்படாததோடு, நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் நேரம் கேட்டபோது அப்பாயின்மெண்ட் அளிக்காதது போன்ற டெல்லியின் நடத்தை தமிழகத்திற்குச் அதிச்சியைக் கொடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் (என்.டி.ஆர்.எஃப்) கீழ் கூடுதலாக 3,000 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, தமிழகத்தில் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 6,230 கோடி உதவி கோரி மத்திய அரசுக்கு கோரிக்கைகளை அனுப்பியது. இருந்தாலும், மத்திய அரசு, 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் அளித்த ரூ.3,000 கோடியில் தமிழக அரசுக்கு நிதி அளிக்கப்படவில்லை.

அதுமட்டுமில்லாமல், தமிழக சட்டப் பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு பரிந்துரைக்க கோரி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழு உள்துறை அமைச்சரை சந்திக்க முயன்றனர். இந்த குழுவில் திமுக எம்.பி.க்கள் மட்டுமல்லாமல், அதிமுக எம்.பி.க்கள், திமுக கூட்டணி கட்சிகளான சிபிஐ, சிபிஎம், விசிக எம்.பி.க்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால், உள்துறை அமைச்சர்கம் தமிழக எம்.பி.க்களுக்கு அவர்களுக்கு சந்திக்க நேரம் கொடுக்கவில்லை. இதையடுத்து, தமிழக எம்.பி.க்கள் குழு தங்கள் கோரிக்கையை குடியரசுத் தலைவர் செயலகத்தில் சமர்ப்பித்தது. அது நடவடிக்கைக்காக அமித்ஷாவின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

மறுநாள் டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு அமித் ஷாவைச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்திப்பு நடக்கவில்லை. டி.ஆர். பாலு உள்துறை அமைச்சருக்கு வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் நேரம் கேட்டு அனுப்பிய செய்திகளுக்கும் வியாழக்கிழமை வரை பதில் கிடைக்கவில்லை. “நீங்கள் உத்தரப்பிரதேசத்தில் கூட்டங்களில் பிஸியாக இருப்பதை அறிந்து கொண்டதால், நாங்கள் மேலும் காத்திருப்பது பயனற்றதாக இருக்கலாம். நாங்கள் விவாதிக்க வேண்டிய விஷயம் பொது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், ஜனவரி 3 அல்லது 4ம் தேதிகளில் சந்திப்புக்கு நேரம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று டி.ஆர். பாலு அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். மத்திய சட்டங்களுக்கு முரணான சட்டங்களை மாநிலங்கள் இயற்றுவதற்கு எந்தவித சட்டத் தடையோ அல்லது தடையோ இல்லை என்று திமுக எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது. இதற்கு ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளிக்க இயற்றப்பட்ட மசோதாவை உதாரணம் காட்டுகிறார்கள்.

பாஜகவுடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் அணுகுமுறை எதிர்பார்த்த மாதிரிதான் இருப்பதாக திமுக தலைவர்கள் கூறுகின்றனர். “அஸ்ஸாம், குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களுக்கு என்.டி.ஆர்.எஃப் நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 5 மாநிலங்கள் பாஜகவால் ஆளப்படுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசின் நிவாரணத் தொகையை ரேஷன் அட்டை தாரர்களுக்குப் பொங்கல் பணமாக வழங்குவது திமுகவுக்கு பெரும் ஆதரவைப் பெற்றுத் தரும் என்று பாஜக நினைக்கலாம்” என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, அமித் ஷா ஒரு திறமையான நிர்வாகி என்றும், அரசியலுக்கு புதியவர் அல்ல என்றும், விரைவில் சந்திப்பதற்கு நேரம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இருப்பினும், தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதி இல்லை, தமிழக எம்.பி.க்கள் சந்திப்பதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் அளிக்காதது போன்ற டெல்லியின் நகர்வு தமிழகத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/delhi-gives-shock-to-tamil-nadu-no-ndrf-fund-no-appoinment-to-tn-mps-delegation-391535/