3 1 2022
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்தபோது எல்லாம், திமுகவின் ஆதரவாளர்கள் கோ பேக் மோடி என்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் செய்து வந்தனர்.
2018ம் ஆண்டு சென்னையில் ராணுவ தளவாட கண்காட்சி தொடக்கவிழா மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி விமானம் மூலம் சென்னை வருகை தந்தார். அப்போது, சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்தன. அதனடிப்படையில், சென்னையில் மொத்தம் 29 இடங்களில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பாக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. அதேபோல், கோ பேக் மோடி என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார். இதனால், இப்போதும் திமுக அத்தகைய எதிர்ப்பு நிலையை மேற்கொள்ளுமா என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த சூழலில், அண்மையில் திமுக எம்.பி ஆர்.எஸ். பாரதி, “பிரதமர் மோடி எங்களுக்கு எதிரியே அல்ல, இந்துத்துவா தான் எங்களுக்கு எதிரி. எனவே தமிழகம் வருகின்ற பிரதமரை நாங்கள் வரவேற்கிறோம். அவர் இப்போது எங்களுக்கு ‘கெஸ்ட்’ எனவே அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை” என்று கூறினார்.
ஆனாலும், பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே ட்விட்டரில் கோ பேக் மோடி ஹேஷ்கேட் ட்ரெண்டிங் செய்யப்பட்டது. இதை ட்ரெண்டிங் செய்ததில் அதிகாரப்பூர்வமில்லாத திமுக ஆதரவு நெட்டிசன்களும் அடங்குவர்.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியுதவியுடன், இராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகிறது.
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி, தமிழக பாஜக சார்பில் நடைபெறும் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த விழாவுக்காக பாஜக சார்பில், மாநில அளவில் ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், பிரதமர் மோடியின் வருகை குறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், “மக்களுக்கு எதிரான திட்டங்களை திமுக அரசு ஒரு போதும் ஆதரிக்காது. மாநில திட்டங்களை தொடங்குவதற்காக தமிழகம் வரும் பிரதமரை வரவேற்பது நமது கடமை; அரசியல் கருத்தியல் என்பது வேறு” என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-kanimozhi-says-it-is-our-duty-to-welcome-pm-modi-391576/