முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற
சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது 2022-2023 ஆம் ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை ஜார்ஜ் கோட்டையில்
இருக்கக்கூடிய சட்டமன்ற அரங்கில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. காலை 10 மணி அளவில் தனது பட்ஜெட் உரையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தொடங்கிவைத்தார்.
ஒரு மணி நேரம் 50 நிமிடம் நிதி நிலை அறிக்கையை வாசித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார். மேலும், நாளை
காலை 10 மணி வரை சட்டமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். பலராலும் வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட இந்த பட்ஜெட், நிறைவடைந்தவுடன் பல வரவேற்ப்புகளையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அதன்படி முக்கிய அரசியல் பிரமுகர்களின் சில விமர்சனங்கள் பின்வருமாறு,
“அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட் இது; பாராட்டும், வரவேற்பும் தெரிவிக்கிறோம்” – காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை.
”நிதிப்பற்றாக்குறை இருந்தாலும், அதை குறைப்பதற்கான முயற்சிகளை நிதியமைச்சர் தீவிரமாக எடுத்துள்ளார்; மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகப்படுத்தும், தொலைநோக்கு பட்ஜெட்” – கொமதேக ஈஸ்வரன்
“நிதியமைச்சரின் வரவு, செலவு திட்டம் வரவேற்கத்தக்கது; தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நிதி நிலை அறிக்கையை முழு மனதோடு ஆதரிக்கிறோம்” – கே.எஸ்.அழகிரி
“பட்ஜெட்டில் சில அம்சங்களை வரவேற்கிறோம்; ஆனால் மகளிர் உரிமை தொகை, புற்றுநோய் ஆராய்ச்சி மையம், பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் முல்லைப்பெரியாறு பற்றிய அறிவிப்பு இல்லை” – பாமக தலைவர் ஜி.கே.மணி
“இன்றைய பட்ஜெட் உரையில், நிதி நிலைமை மேம்பட்டதும் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்படும் என்று மழுப்பலாகப் பேசி தேர்தல் வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு அப்பட்டமாக மகளிரை ஏமாற்றியுள்ளது திமுக” – மக்கள் நீதி மய்யம்
”அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் இந்த உதவித்தொகையை வழங்கினால் மட்டுமே திட்டத்தின் நோக்கம் முழுமையடையும்” – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
“கடுமையான நிதி நெருக்கடியிலும் மக்கள் சார்ந்த, மண் சார்ந்த, மொழி சார்ந்த, விவசாயிகள் நலன் சார்ந்த அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டிருக்கிறார்” – தவாக தலைவர் வேல்முருகன்
source https://news7tamil.live/tamil-nadu-budget-2022-criticisms-of-political-figures.html