சனி, 19 மார்ச், 2022

7 ஆண்டுக்கு பிறகு தமிழக பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை இறங்குமுகம்: நிதித்துறை செயலாளர் பேட்டி

 18 3 2022 தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2வது காகிதம் இல்லாத 2வது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நிதி அமைச்சர், 2022-2023-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இந்த வரவு செலவு திட்டத்தைப் பற்றி சில குறிப்புகளை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன். இந்த ஆண்டு நிதி நிலையை எடுத்துக்கொண்டோம் என்றால், ஒரு மிகவும் இக்கட்டான ஆண்டாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் தெரியும் பெருந்தோற்றின் இரண்டாவது அலை, பெருந்தொற்று மூன்றாவது அலை, எதிர்பாராத விதமாக வரலாறு காணாத மழை வெள்ளம். இது போன்ற பல்வேறு நிகழ்வுகளால், ஏற்பட்ட செலவினங்கள் இவையெல்லாம் இருந்தாலும்கூட, இந்த ஆண்டு முதல் முறையாக 7 ஆண்டுகளுக்கு பின்னர், வருவாய்ப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. இதை நிதியமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்கள்.

கடந்த ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட 7,000 கோடி ரூபாய்க்கு வருவாய்ப் பற்றாக்குறை முதல்முறையாக 7 ஆண்டுகளுக்கு பின்னர், 2014ம் ஆண்டில் இருந்து பார்த்தோமேயானால் வருவாய்ப் பற்றாக்குறை ஏறுமுகமாக இருந்தது. அது இந்த ஆண்டு இந்த நிலைமை மாறி குறைந்துள்ளது. அதே போல, நிதி பற்றாக்குறை 3% மாநில ஜி.டி.பி-யில் இருக்க வேண்டும். அது கடந்த ஆண்டு 4.6% இருந்தது. இந்த ஆண்டு 3.8%-க்கு குறைந்துள்ளது. இந்த 2 குறியீடுகளும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு சிறப்பு நிதி மேலாண்மை நடவடிக்கைகளால் இது எய்தப்பட்டது.

தொடர்ந்து, வரும் ஆண்டுகளிலும் இந்த நிதிப் பற்றாக்குறை அடுத்த ஆண்டு 3.62%க்கு கொண்டுவரலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். அது இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில், 3%க்கு கொண்டுவருவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று நிதி அமைச்சர் கூறியிருக்கிறார்.

வருவாய் பற்றாக்குறை பொறுத்தவரை, பொதுவாக வருவாய் பற்றாக்குறை இருக்கக்கூடாது. எவ்வளவு வருவாய் வருகிறதோ அந்த அளவுக்குதான் நாம் செலவு செய்ய வேண்டும். இப்போது, இந்த ஆண்டு கிட்டத்தட்ட, 55,000 கோடி ரூபாயில் இருக்கிறது. அதை அடுத்த ஆண்டு படிப்படியாகக் குறைத்து, வருவாய் பற்றாக்குறை இல்லாத நிலை எய்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கியமான குறிக்கோள். வருகிற ஆண்டைப் பொறுத்த வரை, 3 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டம் மொத்த செலவினங்கள் இருக்கும். இதில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 17% அதிகமாக இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறோம். ஏனென்றால், இந்த பெருந்தொற்றின் தாக்கம் குறைந்திருக்கிறது. அதனால், வளர்ச்சி, தொழில் வளர்ச்சி மூலம் மீண்டும் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டால், அது 17% உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

மூலதன செலவுகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டைக் காட்டிலும் அடுத்த ஆண்டு 13.96% உயர்த்தி அதை நாங்கள் செலவிடப் போகிறோம். கிட்டத்தட்ட, 43,000 கோடி ரூபாய்க்கு மூலதன செலவினங்கள் மேற்கொள்ளப்படும். முக்கியமான சில திட்டங்களை இந்த வரவு செலவு திட்டத்தில் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்கள். பொதுவாக அனைத்து துறைகளுக்கும் தேவையான நிதி கொடுத்திருக்கிறோம். ஏற்கெனவே, அவர்கள் செயல்படுத்திக்கொண்டிருக்கும் திட்டங்களுக்கும் புது திட்டங்களுக்கும் தேவையான நிதி வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து துறைகளுக்கும் உயர்த்தி கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமாகத்தான் நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

முக்கியமான திட்டங்கள் என்றால், பள்ளிக் கல்வித்துறை. கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பேராசிரியர் க. அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒரு மகத்தான ஒரு திட்டம், கிட்டத்தட்ட 7,000 கோடி ஒதுக்கியிருக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில், எல்லா அரசு பள்ளிகளும் ஆதி திராவிடர் நல பள்ளியாக இருந்தாலும் சரி, கள்ளர் சீர்மரபினர் பள்ளியாக இருந்தாலும் சரி, அனைத்து அரசு பள்ளிகளிலும் சிறந்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கம்ப்யூட்டர் லேப்ஸ், கம்ப்யூட்டர் ஸ்மார்ட் வகுப்பறை, சுற்றுச்சுவர் என 18,000 புதிய வகுப்பறைகள் இவை எல்லாமே இந்த திட்டத்தின் கீழ் எடுத்து செய்யப்படும்.

இந்த ஆண்டு ஒரு 10 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் அரசு ஏற்படுத்தியது. அது மேலும், இன்னும் 15 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும். இல்லம் தேடி கல்வித் திட்டம் மிக சிறப்பான திட்டம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நாட்டுக்கே ஒரு முன்னோடியாக இருக்கும் திட்டம். அந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அதற்கு ஒரு 200 கோடி ரூபாய் இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கி இருக்கிறோம்.

கல்லூரிகளைப் பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டில் நிறைய மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துக்கொண்டிருப்பதால், தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 1,000 கோடி ரூபாய் அடுத்த 5 ஆண்டுகளில் ஒதுக்கி, இந்த ஆண்டு 250 கோடி ரூபாய் அதற்கு ஒதுக்கி இருக்கிறோம். அதில் புதிய வகுப்பறைகள், கம்ப்யூட்டர் லேப் இதை எல்லாம் உருவாக்குவதற்காக ஒதுக்கி இருக்கிறோம்.

பெண் கல்வித் திட்டம், குறிப்பாக அரசு பள்ளிகளில் இருந்து பெண் குழந்தைகள் கல்லூரி அளவுக்கு செல்வது மிகக் குறைவாக உள்ளது. 46% மாணவிகள்தான் அரசுப் பள்ளிகளில் முடித்துவிட்டு கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். இது மற்ற பிரிவையெல்லாம் பார்க்கும்போது மிகமிகக் குறைவாக இருக்கிறது. இதை மாற்றுவதற்காக இராமாமிர்தம் அம்மையார் பெண் கல்வி உறுதித் திட்டம் என்ற புதிய திட்டத்தை மறுவடிவ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு எந்த கல்லூரிக்கு சென்றாலும் அந்த பெண் குழந்தைகளுக்கு பி.ஏ, பி.காம், பி.எஸ்சி, பி.இ., எம்.பி.பி.எஸ் என இளங்கலை படிப்பு வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்களுடைய கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும். கல்லூரி படிப்பு 3 ஆண்டுகளும் அவர்களுக்கு கிடைக்கும். இதில் கிட்டத்தட்ட ஒரு 6 லட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள். இது பயனுள்ள திட்டமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இதன் மூலம், அரசு பள்ளிகளில் இருந்து கல்லூரி செல்லும் பெண்களின் 46% நிச்சயமாக உயர்ந்து, நிறைய பேர் உயர்கல்விக்கு செல்வார்கள் என்று நம்புகிறோம். அதே போல, ஐ.டி.ஐ.கள். அரசு ஐ.டி.ஐ.கள், இந்த ஆண்டு 71 ஐ.டி.ஐ.கலை எடுத்து 2,200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்துவதற்காக அறித்திருக்கிறார். அதில், இண்டஸ்ட்ரீ 4.0க்கு இப்போது இருக்கிற படிப்புகள் இல்லாமல், இப்போது தொழில்துறைக்கு எந்த மாதிரி படிப்புகள் தேவையோ அதை வழங்கப்போகிறோம். இது மேம்பாடு செய்யப்படும். இது மிகவும் பிரபலமான தொழில்துறை சங்கங்கள் மற்றும் நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக நிறைய திட்டங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், புத்தாக்கத் தொழில்கள், ஸ்டார்ட் அப்ஸ், இது மிகமிக முக்கியம். அதில் சென்னையும் தமிழ்நாடும் சிறப்பாக செய்திருந்தாலும்கூட, இப்போது பெங்களூரு, நியூடெல்லி, ஹைதராபாத் இங்கெல்லாம் ஸ்டார்ட் அப்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கிறார்கள். அந்த நிலையமையை மாற்றுவதற்காக, தமிழ்நாட்டு ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதற்காக பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஸ்டார்ட் அப்-க்கு ரொம்ப ரொம்ப முக்கியம் அவர்களின் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். அதை வாங்குவதற்கு மிகப்பெரிய அரசு நிறுவனங்கள் இருக்கிறது. அவர்கள்தான் நிறையப் பொருட்களை கொள்முதல் செய்கிறார்கள்.

அதில் நம் தமிழ்நாட்டை சேர்ந்த, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உற்பத்தி செய்கிற பொருட்களையும், புதிய பொருட்களையும் அரசு துறைகளும் அரசு நிறுவனங்களும் நேரடியாக 50 லட்சம் வரை நேரடியாக கொள்முதல் செய்யலாம் என்று அனுமதி வழங்கப்படும்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஆரம்பித்தால் அவர்களுக்கு உதவி புரிவதற்காக 30 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக டேன்சிம் என்று ஸ்டார்ட் அப் அமைப்புக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது இரண்டும் இதில் இருக்கிறது.

இன்னொன்று கொள்முதலில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உற்பத்தி செய்கிற பொருட்களில், அரசு கொள்முதல் செய்கிற பொருட்களில் 5% வரை வாங்கலாம் என்று ஒரு மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறோம். இது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதே போல ஏற்றுமதி, ஏற்றுமதியில் தமிழ்நாடு மிக முக்கியமான ஒரு மாநிலம். ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பூர் இங்கெல்லாம் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாம் ஏற்றுமதி செய்கிறார்களோ அங்கெல்லாம், அவர்கள்க்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக இந்த நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

சில கொள்கை முடிவுகளை அறிவித்திருக்கிறோம். எஃப்.எஸ்.ஐ, தளப்பிறப்பு குறியீட்டை சில பகுதிகளில் அதிகரிக்கலாம். இப்போது எஃப்.எஸ்.ஐ 3.2-ல் இருக்கிறது. ஆனால், சில மெட்ரோ ரயில் பாதைகள் போகிற வழிகளில் உள்கட்டமைப்பு எங்கே அதிகமாக இருக்கிறதோ கட்டமைப்பு வசதிகள் அதிகமாக இருக்கிறதோ, அதை உயர்த்தி வழங்கலாம் என்று ஒரு கொள்கையை அறிவித்திருக்கிறோம்.

இதனால், ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதே போல, ஹவுசிங் போர்டு கட்டிய நிறைய பழைய கால கட்டங்கள், வீடுகள் எல்லாம் முன்னாடி கட்டி இருக்கிறார்கள். பழைய காலத்து வீடுகள் எல்லாம் இருக்கிறது. அரசு, அலுவலர்கள் குடியிருப்புகள் எல்லாம் இருக்கிறது. விற்றிருக்கிறார்கள். இதையெல்லாம், மீண்டும் கட்டியெழுப்ப (Redevelop) ஒரு கொள்கையை கொண்டு வரப்போகிறோம். அதெல்லாம், குறைந்த எஃப்.எஸ்.ஐ-இல் இருக்கும். 1.2 அப்படி எல்லாம் இருக்கும். அதை எல்லாம் இடித்துவிட்டு முழு எஃப்.எஸ்.ஐ கட்டுவது, ரிடெவலம் பண்ணுவது என ஒரு கொள்கையை அறிவித்திருக்கிறோம்.

அதே போல, எம்.எஸ்.எம்.இ என்கிற குறுசிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காகவும் நிறைய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, அறிவித்த கடன் தள்ளுபடிகள், அரசு அறிவித்த பயிர்க் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி கிட்டத்தட்ட 4,131 கோடி ரூபாய் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கி இருக்கிறோம்.

முதலமைச்சரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்திற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தனியார் துறையில் நிறைய தமிழ் வழிப் பள்ளிகள் இருக்கிறது. அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் என்னென்ன உதவிகள் வழங்குகிறோமோ, நோட்டு புத்தகங்கள், புத்தகங்கள் எல்லாம் அவர்களுக்கும் வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், இந்த வரவு செலவு திட்டத்தைப் பொறுத்தவரை, இது வளர்ச்சிக்காக அனைத்து துறைகளுக்கும் ஒரு கலவையான நிறைய திட்டங்கள் அம்சங்கள் இருக்கிறது. நிறைய கொள்கை முடிவுகள் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஓ.ஆர்.ஆர் என்கிற (Outer Ring Road) சென்னையைச் சுற்றி இருக்கிறது. அதை வளர்ச்சிப் பகுதிகளாக மாற்றுவதற்கு ஆய்வுகள் சொல்லப்பட்டிருக்கிறது. வளர்ச்சிக்காக இந்த வரவு செலவு திட்டத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.

நலத்திட்டங்களில் எந்தவித குறைபாடுகளுமின்றி, எந்தவித தொய்வுகளுமின்றி போதுமான நிதி அனைத்து நலத்திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த நிதியாண்டில் கனிம வளம் மூலம் ரூ.1,000 கோடியும், பெட்ரோல், டீசல் மூலம் ரூ.23,000 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/finance-secretary-muruganandhan-says-about-budget-monthly-rs-1000-to-college-goes-girls-from-govt-school-427095/