கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கும் போது, ஒரு ஆண்டில் 193 நாட்களுக்கு மட்டுமே இயங்குவது ஏன் எனவும், உச்சநீதிமன்றத்தின் விடுமுறை காலவரையறையை குறைக்கக் கோரியும் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜக செய்தித்தொடர்பாளரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யா உச்சநீதிமன்ற விடுமுறை கால வரம்பை குறைக்கக் கோரி இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதில் தாமதிக்கப்பட்ட நீதி; மறுக்கப்பட்ட நீதி என்றும் அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவின் படி நீதியை தாமதிக்காமல் வழங்குவது அடிப்படை உரிமைகளுள் ஒன்று என்றும் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றத்தில் சுமார் 60,000 வழக்குகளும், நாடுமுழுவதுமுள்ள நீதிமன்றங்களில் 3.3 கோடி வழக்குகளும் தேங்கிக் கிடக்கும் நிலையில், 225 வேலை நாட்கள் என்ற உச்சநீதிமன்ற விதிகளின்படி சொல்லப்பட்டிருந்தாலும் ஒரு ஆண்டிற்கு 193 நாட்கள் மட்டுமே உச்சநீதிமன்றம் இயங்குவது ஏன் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் ஒரு ஆண்டிற்கு உச்சநீதிமன்றம் 193 நாட்களும், உயர்நீதிமன்றங்கள் 210 நாட்களும், விசாரணை நீதிமன்றங்கள் 245 நாட்களும் இயங்கி வருகிறது.
13 நீதிமன்றங்கள் செயல்படும் உச்சநீதிமன்றத்தின் ஒரேயொரு நீதிமன்றம் மட்டுமே அவசர வழக்குகளை கோடை கால விடுமுறையின் போது விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தை பொருத்த வரையில் அதற்கு 5 பருவ விடுமுறை காலம் அளிக்கப்பட்டுவருகிறது. கோடை கால விடுமுறையாக 45 நாட்களும், குளிர்கால விடுமுறையாக 15 நாட்களும், ஹோலி பண்டிகைக்கு ஒரு வாரமும், தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு 5 நாட்களும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், குறைந்தபட்சம் 225 நாட்களும் ஒரு நாளைக்கு 6 மணிநேரங்களும் இயங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற விதிகளை சுட்டிக்காட்டி இந்த பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார் அஸ்வினி குமார்.
மேலும், இது 70 ஆண்டுகளுக்கு முந்தைய பிரிட்டிஷ் கால நடைமுறை என்றும் அக்கால கட்டத்தில் நீதிபதிகள் வீட்டிலிருந்து வந்து போல நீண்ட நேரம் ஆகும் என்பதாலேயே இந்த நடைமுறை இருந்ததாகவும், இதனை ரத்து செய்தால் தான் தேக்கம் அடைந்துள்ள வழக்குகளில் விரைந்து நீதி கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து கடந்த ஜனவரியில் ஓய்வு பெற்ற டி.எஸ் தாக்கூர் கோடைகால விடுமுறையின் போது வழக்குகளை விசாரிக்கலாம் என்றும் அதன் மூலம் சில வழக்குகளில் முடிவு கிடைக்கும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.
வழக்குகளில் தாமதமாக முடிவுகள் கிடைப்பது ஒன்றும் புதிய பிரச்சனை இல்லை என்றும் இது பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது என்றாலும் அது தற்போது அச்சமூட்டும் நிலைக்கு வந்துள்ளது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் இதனால் நீதித்துறையை சிரமத்தை சந்தித்து வருவதோடு, மறுபக்கம் மக்களின் நம்பிக்கையையும் இந்த விவகாரம் அசைத்துப் பார்த்துள்ளது என்றும் இதன் மூலம் இந்த பிரச்சனைக்கு ஓரளவு விடிவு கிடைக்கும் என்றும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.