8 5 2022
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டுகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் கொரோனா 4 ஆம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கேரளாவில் புதிய வகை காய்ச்சல் ஒன்று பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் கடந்த சில நாள்களாக குழந்தைகள் அதிகளவில் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பரிசோதித்ததில், தக்காளி காய்ச்சல் பாதிப்பு இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி அம்மாநில சுகாதாரத் துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
கொல்லம் மாவட்டத்தில் நடத்திய கணக்கெடுப்பில் இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
தக்காளிக்கும் தக்காளி வைரஸுக்கும் தொடர்பு இல்லை
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், கேரளா கொல்லம் பகுதியில் பரவி வரும் தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம். சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுவதால் தக்காளி வைரஸ் என்று பெயரிடப்பட்டது; தக்காளிக்கும் தக்காளி வைரஸுக்கும் தொடர்பு இல்லை. இருந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என தெரிவித்தார்
source https://tamil.indianexpress.com/tamilnadu/dr-krishnasamy-condemns-dmk-govt-for-goondas-act-against-ptk-functionaries-451371/