சனி, 15 அக்டோபர், 2022

கர்நாடக ஹிஜாப் தடை வழக்கு: தனியுரிமை, கண்ணியம்.. 19(1)(a) மற்றும் 21 மீறல்.. நீதிபதி சுதன்ஷு துலியா கூறியது என்ன?

 

கர்நாடக ஹிஜாப் தடை வழக்கு: தனியுரிமை, கண்ணியம்.. 19(1)(a) மற்றும் 21 மீறல்.. நீதிபதி சுதன்ஷு துலியா கூறியது என்ன?

கர்நாடக உயர் நீதிமன்ற ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்பளித்தது. இரு நீதிபதிகள் அமர்வு நீதிபதி ஹேமந்த் குப்தா மற்றும் நீதிபதி சுதன்ஷு துலியா தீர்ப்பு வழங்கினர். இதில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுகளை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்தார். அதேவேளையில் நீதிபதி சுதன்ஷு துலியா, இதில் மாறுப்பட்ட பார்வை இருப்பதாக கூறி, ஹிஜாப் தடை உத்தரவு செல்லாது என்றும் அரசாணையை ரத்து செய்வதாகவும் கூறினார்.

நீதிபதி சுதன்ஷு துலியா தனது தீர்ப்பில் பன்முகத்தன்மை மேம்படுத்துதல் மற்றும் பெண்களுக்கு கல்வி வாய்ப்புகள் வழங்குதல் என்ற கண்ணோட்டத்தில் கருத்துகளை கூறினார்.

ஹிஜாப் அணிவது – அவர் அவர்களின் விருப்பம்

அவர் இவ்வழக்கில் கூறுகையில், “பள்ளிகள் குறிப்பாக பி.யூ பல்கலைக்கழகங்கள் சரியான நிறுவனங்களாக இருக்கின்றன, அங்கு நமது குழந்தைகள் இந்த தேசத்தின் வளமான பன்முகத்தன்மையைப் பற்றி அறிந்து அவர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் தேவை. சகிப்புத்தன்மை மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளை உள்வாங்க வேண்டும். வேறு மொழி பேசுபவர்கள், உணவு, உடைகள் பழக்கவழக்கங்களை அறிய வேண்டும்.

நமது பன்முகத்தன்மையைக் கண்டு பயப்படாமல், இந்த பன்முகத்தன்மையைக் கண்டு மகிழ்ந்து கொண்டாட அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. பன்முகத்தன்மையே நமது பலம் என்பதை அவர்கள் உணர வேண்டிய தருணம் இது,” என்றார்.

தொடர்ந்து கூறுகையில், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஹிஜாப் அணிவது வெறுமனே அவர் அவர்களின் விருப்பமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

நீதிபதி துலியா, வகுப்பறைக்குள் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்த முடியாது என்ற உயர் நீதிமன்றத்தின் கண்டறிதலுக்கு மாறுபட்டார். அது ஒரு தகுதியான பொது இடம் என்று கூறினார்.

நீதிமன்றங்கள், போர் அறைகள், பாதுகாப்பு முகாம்கள் போன்றவற்றை தகுதியான பொது இடங்கள் என்று கூறியுள்ளது. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் தேவைக்கேற்ப தனிநபர்களின் சுதந்திரம் குறைக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனியுரிமை, கண்ணியத்தின் மீதான தலையீடு

இது குறித்து நீதிபதி துலியா கூறுகையில், “பள்ளி என்பது பொது இடம், ஆனால் அதை பள்ளி, சிறை, ராணுவ முகாமுடன் வரையறைத்து கூறுவது சரியல்ல. உயர் நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட கருத்து பள்ளியில் ஒழுக்கம் தொடர்பானதாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஒழுக்கம் சுதந்திரத்தின் விலையில் அல்ல, கண்ணியத்தின் விலையில் அல்ல…

பி.யூ பல்கலைக்கழக மாணவிகளை பள்ளி வாசல் முன் ஹிஜாபை கழற்றச் சொல்வது அவர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தின் மீதான படையெடுப்பு, அவர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தில் தலையிடுவதாகும். அது இந்திய அரசியலமைப்பின் 19(1)(a) மற்றும் 21 வது பிரிவின் கீழ் அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். அவர்கள் தங்களது கண்ணியம் மற்றும் தனியுரிமைக்கான அவர்கள் பள்ளி வாசல் மட்டும் அல்லாது வகுப்பறைகுள்ளும் கொண்டு செல்கிறார்கள். இது அவர்களின் அடிப்படை உரிமையே தவிர, உயர் நீதிமன்றத்தால் விவரிக்கப்பட்டுள்ளபடி “வழித்தோன்றல் உரிமை” அல்ல.”

எது முக்கியம்?

ஹிஜாப் தடையின் விளைவாக சில மாணவிகள் தங்களது பொதுத் தேர்வுகளை எழுத முடியாமல் போனது, மேலும் பலர் வேறு பள்ளிக்கு மாறி வேண்டியிருந்தது. தரமான கல்வி பெற முடியாத சூழல் உருவானது. இதற்கு பள்ளி நிர்வாகம், மாநில அரசு பதில் சொல்ல வேண்டும். எது மிகவும் முக்கியமானது? பெண் குழந்தைகளின் கல்வி அல்லது ஆடைக் கட்டுப்பாடா? என்று கேள்வி எழுப்பினார்.

நீதிபதி துலியா மேலும் விவரித்து கூறுகையில், “இந்தியாவின் மிகச் சிறந்த காட்சிகளில் ஒன்று, காலையில் பெண் குழந்தைகள் முதுகில் புத்தகப்பை சுமந்து பள்ளிக்கு செல்வது. அவர்கள் நமது நம்பிக்கை, நமது எதிர்காலம். இருப்பினும், பெண் குழந்தைகள் கல்வி கற்பது கடினம். அது அவர்கள் சகோதரர்கள் கல்வி கற்பதை விட கடினம். இந்தியாவில் உள்ள கிராமங்களில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் முன் தனது தாய்க்கு அன்றாட வேலைகளில் உதவ வேண்டும். துப்புரவு மற்றும் துவைக்கும் வேலைகளை செய்து கொடுத்து விட்டு பள்ளி செல்ல வேண்டும். இது இயல்பாக இருக்கிறது. எனவே இதையும் வழக்கில்பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் பள்ளி செல்வதில் ஏற்படும் சவால்கள் நிறைந்துள்ளன என்றார்.

மேலும், ஹிஜாப் அணிவது அத்தியாவசியமான மத நடைமுறையின் விஷயமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். அது இன்னும் மனசாட்சி, நம்பிக்கை மற்றும் உணர்ச்சியின் வெளிப்பாடாக இருக்கலாம். ஒருவர் ஹிஜாப் அணிய விரும்பினால், வகுப்பறைக்குள் கூட அணிய விரும்பினால் அதை தடுக்க முடியாது. இது அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஆனது. அதை அணிந்தால் தான் அவர்களின் பழமைவாதக் குடும்பம் அவர்களை பள்ளிக்கு செல்ல அனுமதிக்கும் ஒரே வழியாக இருக்கலாம். ஹிஜாப் அவர்களின் கல்விக்கான படிக்கட்டு” என்றார்.

source https://tamil.indianexpress.com/explained/karnataka-hijab-ban-case-justice-sudhanshu-dhulia-verdict-explained-525093/