ஞாயிறு, 16 அக்டோபர், 2022

மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது?

 15 10 2022

தமிழகத்தில் அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் 100 இலவச யூனிட்கள் உட்பட மானியம் பெற மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது.

கடந்த அக்டோபர் 6 தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், மானியத் திட்டங்களின் பலன்களைப் பெற விரும்பும் தகுதியுள்ள தனிநபர் ஆதார் எண் வைத்திருப்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

சொந்த வீடு வைத்திருப்பவர்கள் சிலர் அவற்றை வாடகைக்கு வீடு விடும் போது அவர்களிடம் கூடுதல் மின் கட்டணம் வசூலித்து மானிய விலையில் மட்டும் கட்டணம் செலுத்தி வருகின்றனர். சிலர் ஒரே வீட்டுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு பெற்று குறைவான மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். இதனால் அரசுக்கு பல்வேறு வகையில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை ஒழுங்கு படுத்த மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது?

தமிழக மின்சார வாரியத்தின் இணையதளத்தில் விரைவில் மின் நுகர்வு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான இணைப்பு வழக்கப்பட உள்ளது. இன்னும் ஒரு வார அந்த இணைப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த இணைப்பு கிடைத்தவுடன், நீங்கள் மின் நுகர்வு எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

பின்னர், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP ) அனுப்பப்படும். அதனை பயன்படுத்தி மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

ஆஃப் லைனில் இணைப்பது எப்படி?

மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்தும் போது உங்களது மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

காலக்கெடு என்ன?

தமிழக அரசு மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்தாலும் அதற்காக இதுவரை எந்த காலக்கெடுவும் அறிவிக்கப்படவில்லை.

ஆதார் எண் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன?

ஆதார் எண் இல்லாத மற்றும் இன்னும் மானியம் பெற விரும்புபவர்கள் ஏதேனும் ஆதார் பதிவு மையம் அல்லது நிரந்தர பதிவு மையத்தில் ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு தனிநபருக்கு ஆதார் ஒதுக்கப்படும் வரை, அவர் தனது ஆதார் பதிவு அடையாளச் சீட்டையோ அல்லது ஆதார் பதிவுக்காக அவர் செய்த கோரிக்கையின் நகலையும், வங்கி பாஸ்புக், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களுடன் சமர்ப்பித்து மானியத்தைப் பெறலாம்.

மாநில ஒருங்கிணைந்த நிதியில் இருந்து மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், ஆதார் சட்டத்தின் 7-வது பிரிவின் கீழ் மாநில அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


source