ஞாயிறு, 16 அக்டோபர், 2022

ராகுல் யாத்திரை 36-வது நாள்:

 

14 10 2022

ராகுல் யாத்திரை 36-வது நாள்: கர்நாடக அரசின் 40% கமிஷன் குற்றச்சாட்டு குறித்து சாடல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை பயணம்) மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை கேரளா மாநிலம் வழியாக கர்நாடகாவை எட்டியுள்ளது. வழியில் தொண்டர்கள், பொதுமக்கள் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். ராகுல் காந்தி ஆங்காங்கே பொதுகூட்டம், செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். கர்நாடகாவில் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி 22 நாட்கள் அங்கு யாத்திரை மேற்கொள்கிறார்.

நேற்று யாத்திரையின் 36-வது நாளில் ராகுல், மொளகல்முருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக நேற்று பாஜக-வும் ஜனசங்கல்ப யாத்திரை மேற்கொண்டது. ராகுல் யாத்திரைக்கு அருகில் 120 கிலோமீட்டர் தொலைவில் இந்த யாத்திரையை நடத்தியது.

இன்று ராகுல் பல்லாரி மாவட்டத்தில் யாத்திரை மேற்கொள்கிறார். நேற்று பொது கூட்டத்தில் பேசிய ராகுல், கர்நாடக அரசை நேரடியாக விமர்சித்தார். 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து கடுமையாக சாடினார். அவர் பேசுகையில், “நான் 1000 வேலையில்லாத இளைஞர்களை ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போது அவர்கள், திறமை இருந்தும் ஏன் எங்களால் வேலை பெற முடியவில்லை என்று என்னிடம் கேட்டனர். அதே சமயம் 40 சதவீத கமிஷன் குறித்து தங்களது வேதனையை தெரிவித்தனர் என்றார்.

இந்த நாட்டில் நம்பிக்கை இல்லாத ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் உள்ளது என்றும் சமூகத்தில் வெறுப்பை விதைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு இந்தியாவை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். பாரத் ஜோடோ யாத்திரை என்பது நாட்டின் மகா நதிகள் போன்றது. மதம், சாதி, அந்தஸ்து கடந்தது. இந்த நாடு எப்பொழுதும் ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்துடனும் இருக்க வேண்டும்.

தாய்மொழியில் பேசுவதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க இதை தடுக்க நினைக்கிறது. ஆனால் நாங்கள் அதை நடக்க விட மாட்டோம். இந்தியாவை பிளவுபடுத்துவதை விட்டுவிட்டு கடந்த 45 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் ஏன் அதிகமாக உள்ளது என்பதை பா.ஜ.க விளக்க வேண்டும்” என்று ராகுல் கூறினார்.

அரசின் கொள்கைகள் மீது நேரடி தாக்குதல் நடத்திய ராகுல் காந்தி, “பணமதிப்பிழப்பு, தவறான ஜி.எஸ்.டி முறை அமல்படுத்தியது ஏன்?, கொரோனா காலத்தில் மேற்கொண்ட தவறான நிர்வாகத்தால் பல சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டன. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க இந்தியாவை சாதி மற்றும் மத அடிப்படையில் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன. அதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இது நாட்டை பலவீனப்படுத்துகிறது. இந்தியாவின் ஏழை மக்கள் விலைவாசி உயர்வை எதிர்கொள்வது ஏன், அதேசமயம் பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருப்பது எப்படி “என்று கேள்வி எழுப்பினார்.

மறுபுறம், ஹூவினஹதகலியில் பா.ஜ.க தலைமையில் ஜனசங்கல்ப யாத்திரை நடைபெற்றது. ‘கப்ப கணிகே’ (பணம்) வழங்கும் கலாச்சாரம் காங்கிரஸ் கட்சியில் உள்ளது. கர்நாடகம் அவர்களுக்கு ஏடிஎம் ஆகிவிட்டது என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கினார்.

தொடர்ந்து பேசுகையில், “காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ‘கப்ப கணிகே’ குறித்து பேசினார். இந்த கலாச்சாரம் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே இருக்கிறது என்று பொம்மை கூறினார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தவரை மாநிலத்தை ஏ.டி.எம் போல் பயன்படுத்தினார்கள். கே.பி.சி.சி தலைவர் (டி.கே. சிவக்குமார்) ‘கப்ப கணிகே’ கொடுக்கச் சென்றபோது அமலாக்கத்துறையால் பிடிபட்டார், “நாங்கள் உங்களிடமிருந்து பாடம் கற்க வேண்டியதில்லை.

மக்கள் விழிப்புடன் உள்ளனர். பாக்யாஸ் என்ற பெயரில் மாநிலத்தை கொள்ளையடித்தீர்கள். அன்ன பாக்யா திட்டம் தொடங்கப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டது. நீங்கள் பாக்யத்தை கொடுத்திருந்தால், மக்கள் ஏன் உங்களைத் தோற்கடித்தார்கள்? கர்நாடகா வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது என்றால் அதற்கு முந்தைய காங்கிரஸ் அரசின் ஊழல்தான் காரணம்” என்று விமர்சனம் செய்தார்.

source https://tamil.indianexpress.com/india/rahul-yatra-day-36-bjp-yatra-on-heels-raises-40-commission-charge-525052/