9 10 2022
திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, உட்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி அறிவிக்கப்பட்டார்.
திமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. இதில், பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர் உட்பட 4 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்கள் இந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படுவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோரை தவிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யததால் அவர்கள் மீண்டும் அந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களை திமுக உட்கட்சி தேர்தல் ஆணையர் ஆறுகாடு வீராசாமி அறிவித்து மேடைக்கு அழைத்தார். அப்போது நிகழ்ச்சி மேடைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் உறுப்பினர்களின் ஆராவார முழக்கத்துடன் திமுக தலைவராக அவர் 2-வது முறை பொறுப்பெற்று கொண்டார்.
இதேபோல், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோரும் பொறுப்பேற்று கொண்டனர். மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வந்த துணைப் பொதுச் செயலாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அறிவிக்கப்பட்டார். அவரை கர்ஜனை மொழி கனிமொழி வருக என மு.க.ஸ்டாலின் மேடைக்கு அழைத்தார். மேலும் ஐ.பெரியசாமி, பொன்முடி, ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டனர்.
மேலும் திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகம்மது சகி, பிச்சாண்டி, வேலுசாமி, சரவணன் தேர்வு செய்யப்பட்டனர். முதன்மைச்செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமனம் செய்யப்பட்டார். திமுகவின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, திமுக அயலக அணி புதிதாக ஏற்படுத்தி பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் அணி புதிதாக ஏற்படுத்தியதற்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
-இரா.நம்பிராஜன்
source https://news7tamil.live/official-election-of-dmk-president-m-k-stal-general-secretary-treasurer-also-announced.html