16 12 2022
ப. சிதம்பரம்
கடந்த காலங்களில் பல தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கு வெற்றி பெறுவது என்பது கழுத்தில் கட்டிய பாறாங்கல் போன்ற அதிருப்தியை கொடுத்தது. 1967 வரை இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் கட்சியின் சகாப்தம் முடிவடைந்த பின்னர், மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் வளர்ந்தன. காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசுகளின் சகாப்தம் 1977-ல் தொடங்கியது.
கேரளாவில் மாறி மாறி ஆட்சி பல கட்சிகளுக்கும் சென்றது. 1990களில் இருந்து, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மாறி மாறி பதவியில் இருந்த பிராந்திய கட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம்.
பதவியை மீறுதல்
ஆனாலும் ஆளுங்கட்சி தொடர்ந்து வெல்ல முடியாது என்ற கருத்தை நிராகரிக்கும் வகையில் பல உதாரணங்களும் உண்டு. எம்.ஜி.ஆர் மற்றும் அவரது கட்சியான அ.தி.மு.க தமிழகத்தில் 1977 முதல் 1987ல் அவர் இறக்கும் வரை தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வென்றது. ஜெயலலிதாவும் அவரது கட்சியான அ.தி.மு.க.வும் தமிழகத்தில் 2011, 2016 மற்றும் 2021ல் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றனர். நவீன் பட்நாயக்கும் அவரது கட்சியான பிஜேடியும் 2000 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. குஜராத்தில் 1998 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு முதல் திரு நரேந்திர மோடியின் தலைமையில் 2002 ஆம் ஆண்டிலிருந்து பாஜக தொடர்ந்து ஆறு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. சில சூழ்நிலைகளில் மற்றும் சில தலைவர்களின் கீழ், பதவியில் இருப்பது பலவீனத்தை விட பலமாக மாறியுள்ளது. இந்த நிகழ்வுக்கான காரணத்தை அரசியல் பார்வையாளர்கள், சமூக உளவியலாளர்கள் கவனமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
இது தொடர்பாக எனது மனதில் பட்டதை சொல்லி விடுகிறேன்.
- ஆட்சியில் இருக்கும் கட்சிகள் 5 ஆண்டு கால ஆட்சியில் மிகப்பெரிய தேர்தல் வெற்றிக்கான காரணிகளை தயார் செய்து விடுகின்றன. கே காமராஜ், எஸ் நிஜலிங்கப்பா, கே பிரம்மானந்த ரெட்டி, இஎம்எஸ் நம்பூதிரி பாத், ஹிதேந்திர தேசாய், ஒய்.பி.சவான், எம்.எல்.சுகாடியா, ஜோதிபாசு போன்ற தலைவர்கள் பதவி வகித்த போது இதெல்லாம் நடைமுறைக்கு வரவில்லை. நாம் கேள்விப்பட்டதும் இல்லை.
- அதிகார வர்க்கத்தை, குறிப்பாக காவல்துறையை அரசியல் சார்பு தன்மையுடையதாக ஆளும் கட்சிகள் தயங்குவதில்லை. குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற வேறு எங்கும் இது அப்பட்டமாக தெரிய வில்லை. ராம்பூர் சட்டமன்ற தொகுதியில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், வாக்குப்பதிவு சதவீதம் தோராயமாக 32 சதவீதம். அதே மாநிலத்தின் கட்டௌலி சட்டமன்றத் தொகுதியில் தோராயமாக 56 சதவீதம். மெயின்புரி லோக்சபா தொகுதியில் தோராயமாக 53 சதவீதம். ராம்பூரில் குறைந்த வாக்குகள் பதிவாக காவல்துறை தான் என சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தொழில்நுட்பமும் ஆள்பலமும்
- புத்திசாலித்தனமான மற்றும் தொலைநோக்கு அரசியல் கட்சிகள் தங்கள் அமைப்பை வலுப்படுத்தவும், செம்மைப்படுத்தவும் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. குறிப்பாக வாக்குப்பதிவு நாளில், பா.ஜ., மற்றும் சில கட்சிகள், தேர்தல்களை மேலாண்மை செய்ய பூத் கமிட்டிகளை அமைக்க முடிந்தது. வாக்காளர் பட்டியலின் ஒவ்வொரு பக்கத்திலும் வாக்காளர்களை அதிக அளவில் வாக்களிக்கச் செய்ய குழுக்களை அமைத்து பாஜக பணியாற்றியது.
- நன்கு கட்டமைக்கப்பட்ட கட்சி அமைப்பைக் கொண்ட ஆளும் கட்சிகள் அடியாள் பலத்தையும் சேர்த்துக் கொள்கின்றன. தேர்தலுக்கு முன்னதாகவே மற்ற கட்சிகளில் இருந்து விலகியவர்கள், அடியாள் பலம் கொண்டவர்கள், செல்வாக்கான தலைவர்கள் என அடையாளம் கண்டு வளமான எதிர்காலத்தை அளிப்பதாக உறுதி அளித்து அரசியல்வாதிகளை தமது கட்சிக்கு இழுத்து விடுகின்றனர். இதற்கெல்லாம் பணம் பயன்படுத்தப் படுகிறது. பணம் மட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் இருந்தும் காப்பாற்றுவதாக வாக்குறுதிகளும் அளிக்கப் படுகின்றன. அவர்கள் ஆளுங்கட்சிக்கு வந்த உடனேயே அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை;யம் உடனடியாக நிறுத்தப் படுகிறது.
5. கடந்த சில ஆண்டுகளில், ஆளும் கட்சி மதத்தையம் வாக்குகளுக்காக பயன்படுத்துகிறது. இதற்காக வெட்கமில்லாமல் சில நடவடிக்கைகளை செய்கிறது. எடுத்துக்காட்டாக, குஜராத் (2012, 2017 மற்றும் 2022) மற்றும் உத்தரப் பிரதேசத்தில் (2022) நடைபெற்ற தேர்தல்களில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எந்த வேட்பாளரையும் பாஜக நிறுத்தவில்லை.ஆனாலும் குஜராத் மக்கள் தொகையில் 9.7 சதவீதமும் உத்தரப் பிரதேசத்தில் 20 சதவீதமும் முஸ்லிம்கள் உள்ளனர். ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லை என்பது பிறசமூகத்திரனாரை கவரும் ஒரு அம்சமாகும். இதனால் மத அடிப்படையில் வாக்காளர்கள் அணி திரள்கின்றனர். - ஆளுங்கட்சியின் ஆட்சியின் தோல்வியானது, உரத்த குரலில் பிரச்சார உத்திகள் மூலம் பல்வேறு முறைகளில் திசை திருப்பப் படுகிறது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக எழுதி சலுகைகளை பெரும் ஊடகங்கள் அவற்றை மேலும் மேலும் ஊதி பெரிதாக்குகின்றன . சுதந்திரமான ஊடகம் என்பது கடந்த காலத்தில் நடந்த ஒரு விஷயம் மட்டுமே. அனைத்து ஊடகங்களும் (டிவி மற்றும் செய்தித்தாள்கள்) கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமானவை. அவைகளால் கட்டுப் படுத்தப் படுபவை. சமூக ஊடகங்கள் ஒப்பீட்டளவில் சுதந்திரமாக இலவசமாக இயங்குகின்றன. ஆனால் இவற்றில் போலி செய்திகள், போலி வீடியோக்கள், விஷமத்தனமான விமர்சனங்கள், இயந்திர தனமான இணையதள பதிவுகள் நிறைந்துள்ளன.
வெற்றியாளர்கள் தோற்கலாம்
மேற்கூறியவற்றைத் தவிர, ஒவ்வொரு மாநிலத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு தனித்துவமான பிற அம்சங்களும் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கின்றன என நான் நம்புகிறேன். என் பார்வையில், குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தில் ஒரு விசித்திரமான அமைதியும், சமரசமும் நிலவுகின்றன. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி முன்னொரு காலத்தில் எழுப்பிய மயானத்தின் அமைதியா, அடிமைகளின் மௌனமா என்ற கேள்வி இப்போதும் பொருந்துகிறதா? அப்படி இருக்காது என்று நான் மனதார நம்புகிறேன். ஆட்சிக்கு ஏதிரான குரல்களை அரசால் நசுக்கப்படுகிறது மற்றும் நடைமுறையில் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. இந்தப் போக்குகள் ஒரு பயங்கரமான மௌனத்திற்கும் அமைதிக்கும் இட்டுச் சென்றால், இந்தியா என்பது தேர்தலுக்கான ஜனநாயகம் மட்டும் தான். சட்டப் படியான ஜனநாயகம் இல்லை என்ற நாளை நோக்கி நாம் வேகமாக சென்று விடுவோம்.
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்கள் வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வி அடைந்தவர்களுக்கும் பாடங்கள் கிடைத்துள்ளன. இதில் பொதுவான பாடம் என்னவென்றால், வெற்றியாளருக்கு வலுவான கட்சி அமைப்பு, அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள், உற்சாகமான பிரச்சாரம் மற்றும் நுண்ணிய மேலாண்மை இருந்தது. குஜராத்தில், பா.ஜ.க.வுக்கு மட்டும் நான்கு காரணிகளும் சாதகமாகச் சென்று இமாலய வெற்றியை பெற்று தந்தன. மாறாக, இமாச்சலப் பிரதேசம் (காங்கிரஸ்) மற்றும் டெல்லி கார்ப்பரேஷன் (ஏஏபி) ஆகியவற்றில் இந்த இரு கட்சிகளுமே பிரதானமான போட்டியாளர்கள். அவர்களுக்கும் இந்த நான்கு காரணிகளும் இருந்ததால் பதவியில் இருந்த கட்சியின் மீதான வெறுப்பும் சலிப்பும் இரு காட்சிகளையும் வெல்ல வைத்தன.
தற்போது நடந்து முடிந்திருக்கும் மூன்று மாநில தேர்தல்களில் எந்த கட்சி வென்றிருந்தாலும், எந்த கட்சி தோற்றிருந்தாலும் மூன்று தேர்தல்களில் மூன்று கட்சிகளின் வெற்றி என்பது இருளைக் கிழிக்கும் சூரிய ஒளிக்கீற்றைப்போல ஜனநாயகம் தலைக்கும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
தமிழில் : த. வளவன்
source https://tamil.indianexpress.com/opinion/p-chidambaram-writes-rays-of-sunshine-558814/