6 1 2023

மூத்த அரசியல் தலைவர் பழ கருப்பையா, ‘தமிழர் தன்னுரிமைக் கழகம்’ என்ற பெயரில் புதிய இயக்கம் தொடங்கியுள்ளார். திராவிடத்தைக் காக்க, தமிழைக் காக்க, தமிழர் நலனைக் காக்க, சுரண்டல் அற்ற சமுதாயத்தை உருவாக்க, சேர்ந்து செயல்படுவோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
பழ கருப்பையா யூடியூபில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “திராவிடம் என்பது வெட்டிப்பேச்சு என்கிறார்கள். அண்ணாமலையாலும் ஆளுநர் ரவியாலும் திராவிடத்தை அழிக்க முடியாது. ஆனால், இவர்களுடைய ஊழல் ஆட்சி திராவிடத்துடன் இணைக்கப்பட்டு திராவிடம் என்பது அழிந்துவிடுமோ, அதுவும் ஸ்டாலின் காலத்திலேயே நிறைவேறி விடுமோ என்பதுதான் நம்முடைய கவலை. ஆகவேதான், திராவிடத்தைக் காக்க, தமிழைக் காக்க, தமிழர் நலனைக் காக்க, சுரண்டல் அற்ற சமுதாயத்தை உருவாக்க, சேர்ந்து செயல்படுவோம் வாருங்கள்.
ஊழலில் பங்கு பெறுவதுதான் கட்சி விசுவாசம் என்கிறார்கள். கட்சி விசுவாசம் என்பது தலைமை விசுவாசமாக, தலைமை விசுவாசம் என்பது பாரம்பரிய விசுவாசமாக ஆகிறது. ஆகவே, ஒரு சுரண்டல் அற்ற சமுதாயத்தை உருவாக்க சேர்ந்து செயல்படுவோம் வாருங்கள்.
பாதையின் நடுவே ஒரு பெரிய பாறை கிடந்தது. அதை, நெம்பி அப்புறப்படுத்த வேண்டமா? யாராவது ஒருவர் முதல் மனிதராக முன்வந்தால்தானே இந்த காரியங்கள் நடக்கும். பின்னால், பார்த்துக்கொண்டு யார் யார் வருகிறார்கள் என்று பார்த்து காத்திருப்பதைவிட, முதல் அடியை, முன்னடியை, முதல் செயல்பாட்டை நாம் தொடங்குவோம் என்ற நிலைப்பாட்டில்தான் அந்த பாறையை அப்புறப்படுத்த முடியும். எளிமை, நேர்மை, செம்மை என்ற அடிப்படையில் செயல்படுவோம் வாருங்கள். அரசியலை அறவழிப்படுத்துவோம் வாருங்கள். சந்தைப்படுத்தப்பட்ட அரசியலை சமூகவயப்படுத்துவோம் வாருங்கள்” என்று தனது புதிய இயக்கமான தமிழர் தன்னுரிமை இயக்கத்தில் இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/pala-karuppiah-hosts-new-movement-thamizhar-thannurimai-kazhgam-571984/