5 1 2023
P Chidambaram ப.சிதம்பரம்
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து விட்டது. ஆனால் கடந்த வருடத்தின் நீண்ட, நெடிய நிழல் இன்னும் நீங்கவில்லை. 2008 இன் எதிர்பாராத சர்வதேச நிதி நெருக்கடி 2009 இன் போக்கை தீர்மானித்தது.
அதேபோல 2020 இன் கோவிட் பெருந்தொற்று நோய் 2021 இன் போக்கைத் தீர்மானித்தது. எனவே 2022 நிகழ்வுகளின் இணைப்பு 2023 இன் போக்கை தீர்மானிக்கும். இதன் தாக்கம் உலகின் அனைத்து நாடுகளிலும் பொருளாதார ரீதியாக உணரப்படும். இந்தியாவும் இதற்கு விதிவிலக்காக இருக்காது.
இந்திய அரசாங்கம், நிச்சயமாக, அத்தகைய முன்னறிவிப்புகளை ஏற்க மறுக்கிறது. பா.ஜ.க அரசுக்கு, இந்தியா இதற்கு விதிவிலக்கானது. 2023ல் வளர்ச்சி அதிகரிக்கும், பணவீக்கம் குறையும், வேலையில்லா திண்டாட்டம் குறையும், அமெரிக்க மத்திய வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தினாலும், இந்தியாவிற்கு நிகர மூலதன வரத்து அதிகரிக்கும், ரஷ்யா- உக்ரைன் போரை பொருட்படுத்தாமல், உலக வர்த்தகம் அதிகரிக்கும் என இந்திய அரசு மட்டுமே நம்புகிறது. இதே பாணியில் சிந்திப்பது என்றால் இந்தியாவின் இதர பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்காமல் இருந்தாலும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் ஐ.சி.சி உலகக் கோப்பை 2023 இல் இந்தியாவை ஒரு வரலாற்று வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்று ஒருவர் சமமாக நம்பிக்கையுடன் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். எண்ணங்கள் குதிரைகளானால், இயலாதவர்கள் கூட உலகை சுற்றி வரலாம் என்று ஒரு பழமொழி உண்டு.
அறிக்கைகளும் தகவல்களும்
அரசாங்கத் தலைவர்களும் மூத்த அதிகாரிகளும் தாங்களே தயாரித்த அறிக்கைகளையும் உலக அமைப்புகளின் அறிக்கைகளையும் மீண்டும் வாசிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்தியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த சாராம்சம் இங்கே தரப்படுகிறது.
1.கண்ணோட்டம் :
உலகப் பணவீக்கம் உச்சத்தை எட்டும் என புள்ளி விவரங்கள் கூறினாலும், பொருளாதார சந்தை விரிவடைவதால் இழப்புகளும் இருக்கலாம் என்றும் புரிகிறது. வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரங்கள் (EMI கள்) மிகவும் பாதிக்கப்படக் கூடியவையாகவே தோன்றுகின்றன (RBI Bulletin, டிசம்பர் 2022, மாநிலம் பொருளாதாரம்).
2. பணவீக்கம்
பணவீக்கம் சற்று குறைந்திருக்கலாம், ஆனால் அது நிச்சயமாக உயராது என்று சொல்ல முடியாது. ஆனால் விலைவாசி அப்படியே நீடிக்கிறது. விலை வாசியை குறைக்கும் முயற்சியில் அரசு முதல் படிக்கல்லை வைத்துள்ளது. இருப்பினும், அடுத்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் உணவு தானியம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயராமல் அரசு பராமரிக்கப் பார்க்கிறது. அடுத்த நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் விலைவாசி உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அரசு தனது கண்காணிப்பை விட்டு விட முடியாது. நவம்பர் 2022 இல் (ஐபிட்) நகர்ப்புற பணவீக்கம் 5.68 சதவீதமாகவும் கிராமப்புற பணவீக்கம் 6.09 சதவீதமாகவும் உள்ளது.
3. உலகளாவிய வளர்ச்சி
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) 2023 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சியை 2.2 சதவிகிதமாக மதிப்பிடுகிறது, இது 2022 க்கு 3.1 சதவிகிதம் என்ற முன்னறிவிப்பை விட 90 அடிப்படை புள்ளிகள் குறைவாக உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 6.6 லிருந்து 5.7 சதவீதம் வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ( https://www.oecd.org/ economic-outlook/ november-2022#gdp).
4. உலகளாவிய வர்த்தகம்:
நவம்பர் 28, 2022 அன்று வெளியிடப்பட்ட WTO சரக்கு வர்த்தக கணிப்பின் படி 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் வர்த்தக வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. தற்போதைய 96.2 மதிப்பானது குறியீட்டின் அடிப்படை மதிப்பு 100.0 என்பதை விடவும் குறைவு. இது சரக்குகளுக்கு கேட்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது. ( https://www.wto.org > news22_e).
5. வர்த்தக பற்றாக்குறை :
2022 ஏப்ரல்-நவம்பர் 8 மாதங்களில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 198.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, 2021-22 ஆம் ஆண்டு முழுவதும் 191.0 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில், சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை மட்டும் தோராயமாக 73 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். (DGCI&S).
6. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (-) 3.5 சதவீதமாக விரிவடையும் என IMF மதிப்பிட்டுள்ளது. உலக வங்கி CAD ஐ (-) 3.2 சதவீதம் என மதிப்பிட்டுள்ளது. (நிதி அமைச்சகம், மாதாந்திர பொருளாதார ஆய்வு, நவம்பர் 2022).
7.அரசின் நிதி பற்றாக்குறை
2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நிதிப் பற்றாக்குறையை (FD) முந்தைய ஆண்டின் 6.7 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக மேம்படுத்துவதாக அரசு உறுதியளித்துள்ளது. 2022 டிசம்பரில், அரசாங்கம் ரூ.3,25,756 கோடிக்கான துணைக் கோரிக்கைகளை முன்வைத்தது. நிதியளிப்பதற்கான ஆதாரம் என்ன என்று கேட்கப்பட்டபோது, நிதியமைச்சர் மிதமான வரி வருவாய் மூலம் அரசாங்கம் கூடுதல் பணத்தைப் பெறும் என்று சுட்டிக்காட்டினார் மற்றும் 6.4 சதவீத FD வரம்பு மீறப்படாது என்று உறுதியளித்தார். இது டிசம்பர் 21, 2022 அன்று. வெறும் 48 மணி நேரத்திற்குப் பிறகு, அமைச்சரவை கூடி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் மானிய விலையில் வழங்கப்படும் உணவு தானியங்கள் 2023 இல் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று முடிவு செய்தது. இதற்கு தேவைப்படும் ரூ. 2,00,000 கோடி கூடுதல் செலவு அனுமதி கோரிக்ககையில் சேர்க்கப்படவில்லை. ஆனால் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு ரூ. 60,111 கோடி தரப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. என்னுடைய கருத்துப்படி 2023 ல் மத்திய அரசின் பொது நிதி பற்றாக்குறை அரசே நிர்ணயித்த இலக்கையும் தாண்டி விடும்.
8. வேலையில்லாத் திண்டாட்டம்
இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE) வீடுகளில் எடுத்த கணக்கெடுப்பின்படி, டிசம்பர் 29, 2022 அன்று அகில இந்திய அளவில் வேலையின்மை விகிதம் 8.4 சதவீதமாக இருந்தது. இதில், நகர்ப்புற வேலையின்மை விகிதம் 10 சதவீதமாக இருந்தது (CMIE).
9. பொருளாதார மந்த நிலைக்கான அறிகுறிகள் மிக அதிகமாக தெரிகின்றன. நவம்பர் 2022 இல் 10 ஆண்டு அமெரிக்க கருவூல ஈவுத்தொகை 44 அடிப்படை புள்ளிகள் சரிந்தன. இந்த ஆண்டு அரசு கடன் பத்திரங்கள் மீதான வட்டி 17 அடிப்படை புள்ளிகள் சரிந்தன. அதாவது பொருளாதார மந்த நிலை ஏற்படுவது நிச்சயம். வருவாய் சரிகிறது என்பதையே இவை காட்டுகின்றன. (RBI புல்லட்டின், டிசம்பர் 2022)
பொருளாதார வளர்ச்சி குறித்த எந்த அம்சமும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அரசு இன்னும் உணராதது குறித்து அஞ்சுகிறேன். ரஷ்யா-உக்ரைன் போர், விநியோகச் சங்கிலிகளின் சீர்குலைவுகள், உயர்ந்து வரும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, கொரோனா வைரஸின் புதிய வரவுகள் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற பொருளாதார சூழலில் தான் இந்தியா இந்த புத்தாண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப் படும். நிலையில் இந்தியாவும் இதற்கு விதிவிலக்காக இருக்காது.
தமிழில் : த. வளவன்
source https://tamil.indianexpress.com/opinion/p-chidambaram-writes-2023-economy-571431/