5 1 2023
இந்தியா முழுவதும் என்ஐஏ அமைப்பானது கடந்த 2022-ம் ஆண்டு 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டைவிட 19.67 சதவிகித அதிகமாகும்.
இந்தியா முழுவதும் தீவிரவாதம், தீவிரவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கென்றே மத்திய உள்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் என்ஐஏ அமைப்பு செயல்பட்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு என்ஐஏ அமைப்பு உருவானது. தீவிரவாதிகள் தொடர்பான வழக்குகளில் மாநில அரசு ஒப்புதல் இன்றியே என்ஐஏ-வால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும். மும்பையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகே என்ஐஏ போன்ற அமைப்பின் தேவை உணரப்பட்டதாக சொல்லப்படுகிறது.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பானது ஹைதராபாத், கவுகாத்தி, கொச்சி, மும்பை, கொல்கத்தா, ஜம்மு- காஷ்மீர், சண்டிகர், ராஞ்சி, சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. என்ஐஏ அமைப்பானது கடந்த 2022ம் ஆண்டு மட்டும் 73 வழக்குகளை இந்தியா முழுவதும் பதிவு செய்துள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டைவிட 19.67 சதவீதம் அதிகம். என்ஐஏ அமைப்பு தொடங்கப்பட்டது முதல் இதுவரை அதிகமான வழக்குகள் கடந்த 2022ம் ஆண்டுதான் பதிவு செய்துள்ளப்பட்டுள்ளன.
இந்த 73 வழக்குகளில் 35 வழக்குகள் ஜிகாதி எனப்படும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குழுக்கள் தொடர்புடையது என்கிறது என்ஐஏவின் புள்ளி விவரங்கள். ஜம்மு-காஷ்மீர், அசாம், பீகார், தெலுங்கானா, மேற்குவங்கம், கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகள் பிஎப்ஐ அமைப்பு தொடர்பானவை. 3 வழக்குகள் கடத்தல் தொடர்புடையவை. கடந்த 2022ம் ஆண்டு மட்டும் 59 வழக்குகளில் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல் செய்துள்ளது. மேலும் 368 நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏவின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2022ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 73 வழக்குகளில் 456 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் தலைமறைவாக இருந்தவர்கள். இதேபோல் 2022ல் பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் 109 பேருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 94.39 சதவீதம் என்ஐஏ பதிவு செய்த வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 8 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு நிதி வழங்குவதை தடை செய்வது தொடர்பாக பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கொண்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 78 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே என்ஐஏ அலுவலகம் செயல்பட்டு வந்தாலும் வழக்குப்பதிவு அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு அதற்காக அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியது. இதன் பிறகு முதல் வழக்காக கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடித்த வழக்கை என்ஐஏ பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/increase-in-nia-cases-across-the-country-study-says.html