பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் வழங்கும் திட்டம் மேம்படுத்தப்பட்டு இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு அதன் உரிமையாளர்கள் உரிமம் வைத்திருப்பது கட்டாயமான ஒன்றாகும்.இதற்கென மாநகராட்சியின் சார்பில் கண்ணாம்மாபேட்டை, திருவிக நகர், புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அலுவலகங்களுக்கு நேரில் சென்று பொதுமக்கள் பதிவு செய்ய வேண்டும். இதற்கென கட்டணமாக ரூபாய் 50 வசூலிக்கப்படுகிறது.
மேலும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு அதன் நிறம்,வயது,அதன் வகை,பிராணிகளுக்கு எவ்வித நோயும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இத்தனை வேலைகளை முடிந்த பின்னரே உரிமம் வழங்கப்படும். மேலும் இதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.இத்தகைய வேலைப்பாடுகள் இந்த திட்டம் தற்போது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற அலுவலகங்களுக்கு நேரில் சென்று காத்திருக்க வேண்டியதில்லை. செல்லப்பிராணிகளின் உரிமையாளர் இணையதளங்களில் பதிவு செய்தாலே போதுமானது. எளிமையாக்கப்பட்ட இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை மாநகராட்சி அலுவலகத்திலுள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.இதனை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.விழாவில் மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார்,மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா கூறியதாவது, இணையத்தளங்களில் விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் கால்நடை மருத்துவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து உரிமம் வழங்கிவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது நாய்,பூனை ஆகியவற்றை மட்டுமே இப்பட்டியலில் சேர்த்துள்ளோம்.தொடர்ந்து மற்ற பிராணிகளை சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் கூறியதாவது,கடந்த 2019-20ம் ஆண்டில் மழைநீர் வடிகால் முறைகேடு தொடர்பு குறித்துதான் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு நடத்தி வருகிறது. செல்லப் பிராணிகளுக்கு அனுமதி வாங்க வேண்டுமா என்கிற பொதுமக்களின் அறியாமை குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.மேலும் இத்திட்டத்தில் தெரு நாய்களையும் இணைப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.மேலும் செல்லப்பிராணிகள் கைவிடுதலை இத்திட்டம் தடுக்க உதவி செய்யும். தெருநாய்கள் அதிகமாகுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சி துவக்கத்தில் பொதுமக்களில் ஒருவர் தான் கிட்டத்தட்ட 35 நாய்களை வளர்த்துவருவதாகவும்,சாலைகளில் செல்லும்போது அவற்றின் மீது கல்லெறிதல் போன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் ஆவேசமாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-வேந்தன்
9 6 23
source https://news7tamil.live/chennai-mayor-piya-function-petanimals-online-registration.html