சிறுபான்மை மக்களின் தொடர் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், பொய்
வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்வதை தடுக்க கோரியும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக
மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தெரிவித்ததாவது..
“ எஸ்டிபிஐ கட்சி, மதுரையிலுள்ள ஜனநாயக அமைப்புகள், முஸ்லிம் ஜமாத்களின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து UAPA கருப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட
அப்பாவிகள் இளைஞர்களின் விடுதலைக்காக நீதிமன்றத்தில் வழக்காடுகின்ற வழக்கறிஞர்களை சிறையில் அடைத்திருக்கின்ற கொடுமைக்கு நீதி வேண்டி மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
இந்தியாவை ஆளுகின்ற மோடி, அமித்ஷா அரசு எதிரிகளை பழி வாங்குவதற்கு, தன்னை எதிர்க்கின்றவர்கள், அறவழியில் போராடும் சிந்தனையாளர்களை முடக்குவதற்காக UAPA, NIA, ED போன்ற அமைப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்தச் சட்டங்களால் அப்பாவிகள் துன்புறுத்தப்படுகின்றனர். மதுரையில் 2 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்கு நடத்தினார்கள் என்பதைத் தவிர எந்த தவறும் செய்யாதவர்கள். இதனை தடுக்க தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட வேண்டும். தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடக்கும் அராஜகத்திற்கு எதிராக தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம் அப்பாவிகள் விடுதலை செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
மல்யுத்த வீராங்கனைகள் தற்போது டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண்களின் மீதும் பெண்களின் முன்னேற்றத்தின் மீதும் கிஞ்சிற்றும் கரிசனம் கொண்டவர்கள் நாங்கள் அல்ல என்பதைத்தான் பாஜக அரசின் மௌனம் காட்டுகிறது.
நாட்டின் கௌரவத்தை காக்க உலக நாடுகளுக்கு சென்று பதக்கங்களை பெற்ற
மரியாதைக்குரிய இந்தியாவின் தங்கங்கள் டெல்லியில் தற்போது
அவமானப்படுத்தப்பட்டு வருகின்றனர்
எனவே 2024ல் நடைபெற்ற அத்தனை அநீதிகள் மற்றும் அவமானத்திற்கு காரணமான பாஜக அரசு இந்தியாவிலிருந்து துடைத்து எறியப்பட வேண்டும்” என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/tamil-nadu-chief-minister-should-intervene-against-the-arrest-of-minorities-nellie-mubarak-interview.html