வியாழன், 1 ஜூன், 2023

NEET UG 2023; நீட் தேர்வில் மார்க் குறைவா? எம்.பி.பி.எஸ் தவிர நிறைய படிப்பு இருக்கு!

 31 5 23


நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு எம்.பி.பி.எஸ் தவிர, பல்வேறு மருத்துவ படிப்புகளை படிக்கும் வாய்ப்புள்ளது. அவற்றை பற்றி இப்போது பார்ப்போம்.

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) 2023 மே 7 ஆம் தேதி நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக, அங்கு நீட் தேர்வு நடைபெறவில்லை. இதனால், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது மணிப்பூர் மாநிலத்திற்கான தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வு முடிந்தவுடன் விரைவில் ரிசல்ட் வெளியிடப்படும்.

நீட் தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்ட பிறகு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெறும். இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, தேதிகள் அறிவிக்கப்பட்டபின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

நீட் தேர்வு மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது. பெரும்பாலும் இந்த தேர்வு எழுதுவோர்களின் விருப்பம் MBBS படிப்பதாகும். ஆனால் நீட் தேர்வில் தகுதி பெறுவதன் மூலம் BDS, MBBS, BHMS, BAMS, BUMS, BPT மற்றும் BVSc படிப்புகளில் சேர்க்கைப் பெறலாம். நீட் தேர்வில் குறைந்த தரவரிசையைப் பெற்ற மாணவர்கள் MBBS (இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை) பட்டப்படிப்பைத் தவிர வேறு மருத்துவப் படிப்புகளைத் தேர்வு செய்யலாம்.

MBBS தவிர மற்ற மருத்துவப் படிப்புகளின் பட்டியல்

இளங்கலை பல் மருத்துவ சிகிச்சை (BDS)

இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BAMS)

இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BHMS)

இளங்கலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BSMS)

இளங்கலை கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH)

இளங்கலை யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BUMS)

இளங்கலை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் (BNYS)

இளங்கலை உடற்பயிற்சி சிகிச்சை (BPT)

இதில் யோகா மற்றும் BPT படிப்புக்கு நீட் மதிப்பெண் தேவையில்லை, 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே சேர்க்கை நடைபெறும்.

source https://tamil.indianexpress.com/education-jobs/neet-ug-2023-exam-top-medical-courses-besides-mbbs-in-tamil-683620/