8 7 23
”ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடி தருவதே ஆளுநரின் நோக்கமாக உள்ளது” என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
திராவிட நட்புக் கழகம் ஒருங்கிணைந்து நடத்தும் மத நல்லிணக்க மாநாட்டில்
பங்கேற்பதற்காக வேலூருக்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
திருமாவளவன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
வருகின்ற 18 தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவிக்கும் என நம்புகிறேன்.
பொது சிவில் சட்டம் என்பது ஆர் எஸ் எஸ் இந்துத்துவா செயல் திட்டத்தில் ஒன்று.
இதன் அடிப்படையில் மதத்தின் மூலம் மக்களை பிளவுபடுத்துவதுதான் அவர்களின்
திட்டம். இதனை நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
வருகின்ற 18ஆம் தேதி பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. பாஜகவை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளனர். இரண்டாவது முறையாக காங்கிரஸின் ஒருங்கிணைப்பில் இந்த கூட்டமானது பெங்களூருவில் நடைபெற உள்ளது.
அந்தக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் பங்கேற்க
உள்ளேன். எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த அகில இந்திய தலைவர்
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக ஆளுநர் குறித்து தமிழக முதலமைச்சர் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி
இருக்கிறார். அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. குடியரசுத் தலைவர் அந்த கடிதத்திற்கு விரைவில் எதிர்வினை ஆற்றுவார் என நம்புகிறேன். ஆளுநர் அரசியல் செய்கிறார் , ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியை தருவது மட்டுமே
அவருடைய நோக்கமாக இருக்கிறது.
தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்கவில்லை. தமிழக ஆளுநர் சமூகம், சமத்துவம் , அம்பேத்கர், பெரியார் போன்ற வார்த்தைகளை உச்சரிக்க
மறுக்கிறார். தமிழக ஆளுநர் வள்ளலாரை சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்று திரிபு செய்கிறார். தமிழக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் மற்றும் மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிப்பதில்லை. இதுபோன்று ஏராளமான மசோதாக்கள் நிலுவையில் உள்ளது.
இவையெல்லாம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் நடந்து
கொண்டிருக்கிறார் என்பதற்கான சாட்சி. குடியரசுத் தலைவர் முதலமைச்சர் அனுப்பி உள்ள கடிதத்திற்கு நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
காவல்துறையில் உள்ள அதிகாரிகள், காவலர்கள் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். அவர்கள் சங்கம் வைத்துக் கொள்வதற்கு உரிமை இல்லை . தேவையான நேரத்தில் விடுப்பு எடுத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமை இல்லை, அவர்களையும் அரசு ஊழியர்கள் போல் நடத்த வேண்டும். பிற அரசு அலுவலர்கள் போல அவர்களுக்கும் எட்டு மணிநேர வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று மன அழுத்தத்தில் இருக்கும் காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கு அரசு முறையான வகையில் கவுன்சிலிங் கொடுக்க
வேண்டும்.” என திருமாவளவன் தெரிவித்தார்.
source https://news7tamil.live/governors-aim-is-to-put-pressure-on-the-ruling-dmk-government-thirumavalavan-mp-interview.html