தேசிய புலிகள் காப்பகம் அறிவித்துள்ள மறுகுடியமர்வு திட்டத்தால் உதகை அருகே உள்ள கிராம மக்கள், அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள கிராம மக்களின் நிலையை இந்த செய்தித்தொகுப்பு விவரிக்கிறது..
நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம்; மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ரம்மியமான இடம், விவசாய செழிப்புமிக்க இயற்கை நிறைந்த சூழல், அடர்ந்த வனப்பகுதியில் பச்சைப் போர்வை போர்த்தியது போன்ற காட்சி என தெங்குமரஹாடா கிராமத்தின் எழில்மிகு காட்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு எழில் மிகுந்த கிராமமான தெங்குமரஹாடாவிற்குள் அக்கிராம மக்கள் தவிர வெளி ஆட்கள், சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதோடு அந்த பகுதி வனப்பகுதி கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.வனப்பகுதிக்குள் அமைந்திருக்கும் இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்க பரிசலை கடந்து பேருந்து மூலமே சமவெளி பகுதிக்கு செல்ல முடியும். இரண்டாம் உலகப் போர் முடிந்த நிலையில் நாட்டில் நிலவிய பஞ்சத்தை கருத்தில் கொண்டு அரசு வழங்கிய நிலத்தை பெற்று இப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வந்தனர். இருளர் பழங்குடியின மக்கள் மற்றும் கீழ் கோத்தகிரியை சேர்ந்த மலைவாழ் கிராம மக்களுக்கு சுமார் 100 ஏக்கர் நிலம் தெங்குமரஹாடாவில் வழங்கப்பட்டு தெங்குமரஹடா விவசாயிகள் கார்ப்பரேஷன் அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.தெங்குமரஹாடா கிராமம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளதால் கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் வசிப்பிடமாக உள்ளதால் கிராமத்தை மீண்டும் வனப்பகுதியாக மாற்ற தேசிய புலிகள் காப்பகம் முடிவு செய்துள்ளது.தெங்குமரஹாடா கிராமத்தில் வசிக்கும் 497 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்வதற்கு ஏதுவாக அரசு வழங்கிய நிலத்தை திரும்ப எடுத்துக் கொள்வதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன் படி அங்கு வசித்துவந்தவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கி மறுகுடியமர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டநிலையில் அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
மூன்று தலைமுறைக்கும் மேலாக வாழ்ந்து வரும் கிராமத்தையும், விவசாயத்தையும் வாழ்ந்த மண்ணை விட்டுவிட்டு வெளியேறச் சொல்லியிருப்பதால் அக்கிராம மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். வனப்பகுதியாக மாற்றும் முன்னரே தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்ததாகவும் அக்கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்
இதுகுறித்து அந்த கிராம மக்கள், “பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்த தங்களுக்கு வேறு பகுதியில் இடம் குடியமர்வு செய்தால் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் நிலை மிகவும் பாதிப்படையும்” என தெரிவித்தனர்.
மேலும் விவசாயிகள் இயற்கையோடு ஒன்றிணைந்து பல ஆண்டுகளாக விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் தங்களை வெளியேற்ற பிறப்பித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளனர். கூட்டுறவு பண்ணை மூலமாக அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் கிராம மக்கள் விடுத்துள்ளனர்.
source https://news7tamil.live/a-resettlement-plan-to-ask-farming-villagers-to-leave-what-is-happening-in-tengumarahada-village.html