வியாழன், 26 அக்டோபர், 2023

திருப்பூர் அருகே ரூ.100 கோடி மதிப்பிலான பள்ளிவாசல் சொத்து மீட்பு!

 

பள்ளிவாசல் சொத்துக்களை முறைகேடு செய்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவையடுத்து சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளிவாசல் சொத்துக்களை தமிழ்நாடு வக்பு வாரியம் மீட்டது.

திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டையில் உள்ள அஹ்லே சுன்னத் ஜமாத் பள்ளிவாசலின் கட்டுபாட்டின் கீழ் மேலும் இரண்டு பள்ளிவாசல்கள் மற்றும் சுமார் 140 கடைகள் உள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த சொத்துக்கள் அனைத்தையும் சலீம் என்ற அப்துல் ரஹ்மான் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நிர்வகித்து வந்தார். இந்நிலையில் இவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி காதர்பேட்டை பூர்வீக ஜமாத்தார் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் கடந்த 2013ம் ஆண்டு புகாரளித்தனர்.

இதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் சலீமை அப்பொறுப்பில் இருந்து வக்பு வாரியம் நீக்கியது. இதனை எதிர்த்து சலீம் சார்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த 2015ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

எனினும் சலீம் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு கடந்த பத்து ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் சலீமை நீக்கியது செல்லும் என அறிவித்தது. மேலும் வக்பு வாரியத்தை பள்ளிவாசலின் சொத்துக்களை கையகப்படுத்தவும் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டன.

வேந்தன்

source https://news7tamil.live/tiruppur-properties-recover-muslims.html