புதன், 25 அக்டோபர், 2023

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு – ரவுடி கருக்கா வினோத் கைது!

 


ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.  ராஜ்பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசியவரை காவல்துறை பிடித்து விசாரித்ததில் அந்த நபர் ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது.  அவரிடமிருந்து மேலும் 3 குண்டுகளை பறிமுதல் செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது ஏற்கனவே 9 வழக்குகள் உள்ளன.  பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த 2022-ம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் கைதானது குறிப்பிடத்தக்கது.  கருக்கா வினோத் 180 மி.லி  பாட்டிலில் பெட்ரோல் குண்டு  வீசியுள்ளார்.  மொத்தம் 4 பெட்ரோல் குண்டுகளை தயார் நிலையில் வைத்திருந்து ஒரு குண்டை மட்டும் வீசியுள்ளார்.

கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுவெடிப்பு வழக்கில் கடந்த  3 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை இரவு சென்னை வருகை தர உள்ள நிலையில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கருக்கா வினோத்திடம் நடத்தப்பட்ட விசாரணையிலிருந்து பெறப்பட்ட முதற்கட்ட வாக்குமூலத்தில் நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால் விரக்தியில் ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசியதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

source https://news7tamil.live/petrol-bomb-attack-in-front-of-governors-house-rowdy-garukka-vinod-arrested.html