சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் செயல்படுத்தப்பட்டு எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனையில் இந்தியாவின் ‘யுபிஐ’ சிறந்து விளங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் எளிதாக பணம் அனுப்ப உதவுகின்றன. அதுபோல சாதாரண டீக்கடையில் தொடங்கி மிகப் பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள் என அனைத்து இடங்களிலும் ‘க்யூஆர் கோடு’ மூலமாக பணம் அனுப்பும் முறையை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை (யுபிஐ) மற்றும் சிங்கப்பூரின் ’Pay Now’ ஆகிய தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் வாழும் சிங்கப்பூர் மக்கள் பணப்பரிவர்த்தனையை எளிதாக மேற்கொள்ளமுடியும்.
இந்நிலையில் சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் செயல்படுத்தப்பட்டு எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனையில் இந்தியாவின் ‘யுபிஐ’ சிறந்து விளங்குவதாக அமெரிக்க நிதித்துறை துணை அமைச்சர் ஜெய் ஷாம்பாக் பாராட்டு தெரிவித்துள்ளார். ஹாா்வா்டு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
உலக நாடுகளில் பணப் பரிவா்த்தனை அமைப்புகளைப் புதுப்பித்துக் கொள்வதில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கப்படும் தர நிலையானது அதன் முன்னோடிகளைவிட அதிக தரவு நிறைந்ததாகவும், குறைந்த தோல்வி விகிதங்களுடன் பணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்குகிறது. வலுவான இருதரப்பு பொருளாதார உறவுகளைக் கொண்ட நாடுகள், அவற்றின் பரிவா்த்தனை முறைகளை மற்ற நாடுகளுடன் இணைத்துக் கொள்கின்றன.
சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இந்தியாவின் யுபிஐ செயல்படுத்தப்பட்டது. அந்த நாடுகளின் இருதரப்பு உறவு வளா்ச்சியில் பெரிதும் உதவி இருக்கிறது. தெற்காசிய நாடுகளில் பெரும்பாலான நாடுகள் தங்களின் பணப் பரிவர்த்தனை முறையை இணைத்து கொள்வதில் லட்சியம் கொண்டுள்ளன. இரண்டு சூழல்களிலும், உறுதியான, குறுகிய கால முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை நோக்கி முயற்சிகளை வலியுறுத்தும் ஜி20 வழிமுறைகள் வழிநடத்துகிறது” என தெரிவித்தார்.
source https://news7tamil.live/indias-upi-excels-in-cross-border-money-transactions.html