வியாழன், 26 அக்டோபர், 2023

ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டுவீச்சு: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டனம்!

 ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன்விடுதலை செய்யப் பரிந்துரைத்து தமிழ்நாடு அரசால் கடந்த ஆகஸ்ட் 24 அன்று ஆளுநருக்குக் கோப்பு அனுப்பப்பட்டது.  இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அக்கோப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.

முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலைக்கான கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் வரும் அக்டோபர் 28 அன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும்,  இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.  ஆளுநர் மாளிகை அருகில் நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதலை தமுமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

தமுமுக நடத்தவுள்ள ஜனநாயகப் போராட்டத்தை திசைச் திருப்பும் விதமாக இதுபோன்ற சம்பவத்தைச் சமூகவிரோதிகள் செய்துள்ளதாகக் கருத வேண்டியுள்ளது.  பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை மட்டும் கைது செய்யாமல் அவரது பின்னணியில் உள்ளவர்களையும் தமிழகக் காவல்துறை விசாரித்து விரைவில் கைது செய்ய வேண்டும் .

கண்ணியத்துடனும்,  கட்டுப்பாட்டுடனும் இயங்கும் தமுமுக,  தனது ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தைக் கட்டுக்கோப்புடன் திட்டமிட்டபடி அக்டோபர் 28 மாலை நடத்தும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” 

இவ்வாறு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/petrol-bombing-at-the-gate-of-governors-house-tamil-nadu-muslim-munnetra-kazhagam-condemns.html