ஞாயிறு, 15 அக்டோபர், 2023

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மத்திய அரசு ஆட்சியில் அதிகரித்துள்ளது – சமாஜ்வாதி எம்.பி.டிம்பிள் யாதவ் பேச்சு!

 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது என சமாஜ்வாதி கட்சி எம்.பி.டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார்.

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் கலைஞர் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி முதல் அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்தனர். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கலந்து கொண்டனர்.

மேலும் இம்மாநாட்டில் தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி,  இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட  இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.டிம்பிள் யாதவ் பேசியதாவது:

”சமூக நீதிக்காக பாடுபட்டவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.  ராஜமன்னார் குழு அறிக்கை மூலம் முதலமைச்சர் தேசிய கொடியை ஏற்றும் உரிமை பெற்றவர் அவர். மகளிர் மேம்பாடு, கல்வி, சொத்து உரிமை, உள்ளாட்சி தேர்தல், விதவை, கலப்பு திருமணம் போன்ற பல முன்னோடி திட்டங்கள் திமுக அரசு கொண்டுவந்துள்ளது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு சதவிகித்தை அதிக்கப்படுத்தியவர் கருணாநிதி.

பெண்கள் உரிமையை மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளது. மணிப்பூர் அதற்கு ஓர் ஆதாரம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக, தேர்தலை கருத்தில் கொண்டு கண்துடைப்பிற்காக பாஜக பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/violence-against-women-and-children-has-increased-under-bjp-rule-samajwadi-mp-dimple-yadavs-speech.html