சனி, 21 அக்டோபர், 2023

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

 

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதயுடன் 21 குண்டுகள் முழங்க சி நல்லடக்கம் செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை என்ற விவசாயத் தம்பதிக்கு 1941-ம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தவர் பங்காரு அடிகள் என்கிற சுப்பிரமணி. வளர்ந்த பின், சோத்துப்பாக்கம் அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த போது, உத்தரமேரூரைச் சேர்ந்த லட்சுமி என்ற பள்ளி ஆசிரியையைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அன்பழகன், செந்தில் குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

சென்னையை அடுத்த மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி ஆன்மிக குருவாக விளங்கி வந்தார். 1970-களின் தொடக்கத்தில், சக்தி பீடத்தை நிறுவி, அருள்வாக்கு சொல்லத் தொடங்கினார். அதன்பின்னர், கொட்டகை அமைத்து, ஆதிபராசக்தி பீடத்தை உருவாக்கியதும், சில ஆண்டுகளில் அங்கு பக்தர்கள் குவியத் தொடங்கினர். 1978-ல் முதன்முதலாக, காஞ்சிபுரத்தில், ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தைத் தொடங்கினார். இன்று வரை 2,500-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும், தொண்டாற்றி வருகின்றன.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கருவறையில் பெண்களைப் பூஜை செய்ய அனுமதித்தும், மாதவிடாய்க் காலங்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையைக் கொண்டுவந்தும் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மத்தியில் ஆன்மிக எழுச்சி ஏற்பட்டது. அவர்கள் ஆண்டுதோறும் மாலை அணிந்து, விரதமிருந்து, ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவரைப் பின்பற்றுபவர்கள் உள்ளனர் .

ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பங்காரு அடிகளாரின் ஆன்மிகச் சேவையைப் பாராட்டி, 2019-ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.

மேல்மருத்துவத்தூர் கோயில் அருகிலேயே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமாதி ஒன்றை கட்டி வைத்துள்ளார் பங்காரு அடிகளார். இந்நிலையில், கடந்த ஓராண்டாகவே உடல்நிலை சரியில்லாமல். சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பால் நேற்று (அக்டோபர் 19-ம் தேதி) காலமானார். அவரது மறைவு ஆதிபராசக்தி சித்தர் பீட பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித்தலைவர்கள் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

பங்காரு அடிகளார் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். அவர் தனது இரங்கல் பதிவில், “ஸ்ரீ பங்காரு அடிகளார் ஐயா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனிதகுலத்துக்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவை விதைத்தார். அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.” எனத் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பங்காரு அடிகளாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி  உள்ளிட்ட பல அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதோடு, தமிழகம் மட்டுமல்லாது பிற மாநில மக்களும் நேரில் வந்து பங்காரு அடிகளாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளாரின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அரசு சார்பில், துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து அடிகளாரின் உடல் நல்லடக்கத்துக்காக, மேல்மருவத்தூர் சக்தி பீடத்தில் கருவறை பின்புறமுள்ள புற்றுக்கோயில் அருகே கொண்டுசெல்லப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பெண்கள், தங்களை வழிநடத்திய பங்காரு அடிகளாரின் உடலுக்கு, கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். பிறகு பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


source https://news7tamil.live/the-body-of-the-late-bangaru-adigar-was-laid-to-rest-with-21-gunshots.html