வெள்ளி, 20 அக்டோபர், 2023

காங். ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் – தெலங்கானாவில் ராகுல் காந்தி வாக்குறுதி

 

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அம்மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங். எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி அங்கு பிரச்சாரத்தில்  ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர்,  “தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நிலப் பிரபுக்களுக்கும், சாமானிய மக்களுக்கும் இடையிலான போட்டியாக இருக்கும். இந்த தேர்தலில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அணி தோல்வியடைவது உறுதி. 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவர், இன்று வரை மக்களிடம் இருந்து விலகியே உள்ளார். அவரது ஆட்சியில் ஊழல்கள் அதிகரித்துவிட்டன.

எதிர்க்கட்சியினர் மீது உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளை ஏவி விடும் பாஜக அரசு, ஊழல் மலிந்துவிட்ட தெலங்கானாவில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவர்களுக்கு இடையே ரகசிய உடன்பாடு இருப்பதை இது வெளிக்காட்டுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்பது தொடர்பாக நாடு முழுவதும் விவாதம் நடக்கிறது. ஆனால், பிரதமரும், தெலங்கானா முதலமைச்சரும் வாய்திறப்பதில்லை. தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.


source https://news7tamil.live/kong-caste-wise-census-will-be-conducted-if-govt-is-formed-rahul-gandhi-promise-in-telangana.html