சனி, 28 அக்டோபர், 2023

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது கல்வீச்சு தாக்குதல் ஏன்?-வெளியான அதிர்ச்சி தகவல்!

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் கல்வீச்சு சம்பவத்தில் 4 பேரை
போலீசார் கைது செய்தனர்.  கம்பளி பூச்சி பிரச்சினையால், கற்களை வீசியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை தியாகராய நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அலுவலகத்தின் வளாகத்திற்குள் 6 க்கும் மேற்பட்ட பீர் பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  அந்த சமயம் கட்சி அலுவலகத்துக்குள் யாரும் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் இது தொடர்பாக மாம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை
நடத்தினர்.  அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக்
கொண்டு பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி சென்ற நபர்களை தேடி வருவதாகவும்,
மேலும் அலுவலகத்திற்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் அறிந்து இந்திய கம்யூனிஸ்ட்
நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் அங்கு கூடியதால் சிறிது நேரம்
பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட
செயலாளர் சிவா,  மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அதில், இரவு எட்டு மணிக்கு அலுவலகத்தின் பின்புறத்தில் இருந்து சிலர் மது பாட்டில்களையும் கற்களையும் வீசியதாகவும் , அலுவலகத்தில் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும்,  ரோந்து போலீசார் வந்து விசாரித்து கொண்டிருந்த போது சிலர் அலுவலக வளாகத்திற்குள் மது பாட்டில்களை வீசினர்.  இது திட்டமிட்ட சம்பவம்,  காவல் துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சிவா புகாரில் தெரிவித்துள்ளார்.

போலீஸ் விசாரணையில்,  அலுவலகத்தில் கற்கள், மது பாட்டில்களை வீசியது தேனாம்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அலெக்ஸ், பாரதி, அருண்குமார், பார்த்திபன்  ஆகிய நான்கு பேர் என்பது தெரிந்தது.  இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மதுபோதையில் கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, காவலாளி சுதாகருடன்
தகராறில் ஈடுபட்டதுடன்,  கட்சி அலுவலகத்திற்குள் கற்கள் மற்றும் காலி
மதுபாட்டில்களை வீசியுள்ளனர்.  இதனை விசாரித்ததில், கட்சி அலுவலகத்திற்குள் இருந்த மரத்தில் இருந்து கம்பளி பூச்சிகள் இவர்கள் வசித்து வந்த வீடுகளின் மேல் விழுந்துள்ளது. இதனால் பிரச்னை இருந்து வந்துள்ளது.  இதன் காரணமாக கற்கள், மது பாட்டில்கள் வீசப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

source https://news7tamil.live/why-was-the-stone-pelting-attack-on-the-communist-party-of-india-headquarters-shocking-information-revealed.html