ஞாயிறு, 29 அக்டோபர், 2023

பிரதமர் ஆகும் ஆசை உள்ளதா? கேள்விக்கு எதிர்பார்க்காத பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின்

 stalin

முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் ஆகும் எண்ணம் இருக்கிறா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு  முக்கியமான பதிலை அவர் வழங்கி உள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின்  அளித்துள்ள பேட்டியில் அவரிடம் முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு  நல திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மாநில  அரசுகளுக்கு பெரும் பொருட்செலவாகிறது. இதனை எப்படி பார்க்கிறீர்கள் ? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ஸ்டாலின் “ கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமாக  இருந்தாலும் சரி, எந்தவொரு மக்கள் நல திட்டமும், எவ்வளவு  சவால்கள் நிரம்பிய திட்டமானாலும் சரி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் போது, ஏற்படும் சவால்களை சமாளிக்க வேண்டும். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட கடன் சுமை நிதிப் பற்றாக்குறை, நிர்வாகச் சீர்கேடு போன்றவற்றைச் சமாளித்து  பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டு அணுகுமுறை போன்ற சவால்களை தாண்டி சிறப்பாக செய்து வருகிறோம் “ என்று கூறினார்.

எதிர்காலத்தில் பிரதமர் ஆகும் எண்ணம் உள்ளதா? என்று கேள்விக்கு ஸ்டாலின் “ தேசிய அரசியலில் திமுக 3வது பெரிய கட்சியாக இருக்கிறது. கிட்டதட்ட  கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழந்த முத்திரையை பதித்துள்ளது. பிரதமர் இந்திரா காந்தி முதல் மன்மோகன் சிங் ஆட்சி என பல முக்கிய தருணங்களில் திமுக உறுதுணையாக இருந்துள்ளது. நெருக்கடி நிலைக் காலத்தில் இந்தியாவின் எந்த மாநிலமும் முன்னெடுக்காத ஜனநாயக  உரிமைக் குரலை முன்னெடுத்து, வட இந்திய அரசியல்  தலைவர்களும்  சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தமிழ்நாட்டில் களம் அமைத்துக் கொடுத்தவர்  கலைஞர். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் தலைமையிலான  தேசிய முன்னணி அரசின்  முதுகெலும்பாக இருந்தது திமுக. குடியரசுத் தலைவர்  தேர்தலில் திமுகவின் நிலைப்பாடுகள் தேசிய அளவில்  கவனம் பெற்று, வெற்றிகரமாக அமைந்துள்ளன.

கலைஞரின் வழியில் நாட்டின் இன்றையக் சூழலையும், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில்கொண்டும் இந்தியா கூட்டணியின் செயல்பாட்டில் தி.மு.க தன் பங்களிப்பை விரிவுபடுத்தி உள்ளது. என் உயரம் எனகுத் தெரியும் என்று சொல்வார் தலைவர் கலைஞர். மு.க.ஸ்டாலினுக்கும் தன் உயரம் நன்றாகத் தெரியும்” என்று கூறியுள்ளார்.  


source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-stalin-reply-to-question-to-become-prime-minister-in-future-1676273