திங்கள், 30 அக்டோபர், 2023

விஷம் உள்ளவர்கள், விஷத்தை தான் கக்குவார்கள்!” மத்திய அமைச்சர் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

 

கேரள குண்டு வெடிப்பில் ஹமாஸ் அமைப்பை இணைத்து பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியானது. குண்டு வெடித்த பின்பு, தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. தகவலறிந்த பின், தீயணைப்பு மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தவிரப்படுத்தினர். விசாரணையில், களமசேரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் IED(Improvised Explosive Device) ரக குண்டு பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு டிபன் பாக்ஸில் IED வைத்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன என கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கேரளாவில் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டுள்ளது. இதனால் விசாரணை மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது X தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகளின் சமாதான அரசியலின் விலையை சமூகத்தின் அப்பாவி மக்களே சுமக்க வேண்டியுள்ளது. வரலாறு அதை தான் நமக்கு கற்று கொடுத்திருக்கிறது. வெட்கக்கேடான அரசியல் – காங்கிரஸ்/சிபிஎம்/ஐக்கிய கூட்டணி/ INDIA கட்சிகள், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக கேரளாவில் வெறுப்பை பரப்புகின்றன. பொறுப்பற்ற முட்டாள்தனமான அரசியல்” இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்த கருத்துகளுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதாவது:

“விஷம் உள்ளவர்கள், விஷத்தை தான் கக்குவார்கள்… நான் மோசமான அரசியல் செய்கின்றேன் என்றும், இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறேன் என்றும் மத்திய அமைச்சர் ஒருவர் கூறுகிறார். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது… அவர் ஒரு மந்திரி என்பதால், விசாரணை நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச மரியாதை கொடுக்க வேண்டும். இது போன்ற ஒரு தீவிரமான சம்பவத்தின் போது, ஆரம்ப கட்டத்திலேயே, ஒரு சிலரை குறிவைத்து இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார். இது அவர்களின் வகுப்புவாத கொள்கையை வெளிப்படையாக காட்டுகிறது. ஆனால் கேரளாவில் அத்தகைய வகுப்புவாத பிரிவினை இல்லை. கேரளா எப்போதுமே வகுப்புவாதத்திற்கு எதிராக நிற்கிறது… இவர்கள் எந்த அடிப்படையில் ஒரு சமூகத்தை குறிவைத்து தவறான கோணத்தில் விமர்சிக்கிறார்கள்? இவ்வளவு பொறுப்பான பதவியில் அமர்ந்து கொண்டு, எந்த அடிப்படையில் அவர்  இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுகிறார். இவ்வாறு பினராயி விஜயன் கேட்டமாக கேள்விகளை முன்வைத்தார்.


source https://news7tamil.live/poisonous-people-spew-venom-kerala-chief-minister-pinarayi-vijayan-strongly-condemned-the-union-ministers-comment.html