வெள்ளி, 13 அக்டோபர், 2023

காஸாவிற்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை அனுமதிக்க வேண்டுமா? அப்ப இத செய்ங்க!” – ஹமாஸ்-க்கு நிபந்தனை விதித்த இஸ்ரேல் அமைச்சர்!

 

காஸாவிற்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை அனுமதிக்க வேண்டுமா? அப்ப இத செய்ங்க என ஹமாஸ்-க்கு இஸ்ரேல் அமைச்சர் நிபந்தனை விதித்துள்ளார்.

காஸா பகுதியில் மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் இஸ்ரேலின் முற்றுகையால் தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலிய மின்வள துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். ஹமாஸ் பிடித்து வைத்துள்ள பிணைக்கதிகளை வெளியேவிடும் வரை எந்தவிதமான அத்தியாவசிய பொருள்களோ மனிதாபிமான உதவிகளோ உள்ளே அனுமதிக்கப்படாது எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

“காஸாவிற்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை அனுமதிக்க வேண்டுமா? இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்டவர்கள் வீடு திரும்பும் வரை காஸாவில் எந்த மின் பொத்தானும் வேலை செய்யாது, எந்த குழாயிலும் நீர் வராது, எந்த எரிபொருள் வாகனமும் உள்ளே நுழையாது” எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட ஹமாஸ் குழுவினர், கிட்டத்தட்ட 150 பேரைப் பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர். இவர்களில் இஸ்ரேலியர்கள், வெளிநாட்டினர், இரட்டை குடியுரிமையுள்ளவர்கள் ஆகியோர் அடக்கம்.

ஏற்கெனவே உணவு பற்றாக்குறை நிலவி வருவதால் மக்கள் கடைகளுக்கு முன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மற்ற நாடுகளில் இருந்து அனுப்பப்படும் சரக்கு வாகனங்களையும் உள்ளே விட மறுக்கிறது இஸ்ரேல். மேலும், இருதரப்பிலும் உயிர்களின் பலி எண்ணிக்கை 2500-க்கும் மேலாக இருக்கலாம் என உலக நாடுகள் கவலையுறுகின்றன. இந்த நிலையில் அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடு உயிர் இழப்பு எண்ணிக்கையைப் பல மடங்காக உயரலாம் என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.


source https://news7tamil.live/should-gaza-be-allowed-humanitarian-aid-then-do-this-israeli-minister-who-imposed-conditions-on-hamas.html