விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால் நாடே மகிழ்ச்சியாக இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
சத்தீஸ்கா் சட்டப்பேரவைத் தோ்தல் நவம்பர் 7, நவம்பர் 17-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அந்த மாநிலத் தலைநகா் ராய்பூா் அருகே உள்ள கதியா கிராமத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று சென்றாா். அங்கு அவா் விவசாயிகளுடன் கலந்துரையாடினாா். மேலும், அவா்கள் நெல் அறுவடை செய்யவும் உதவினாா்.
ராகுல் காந்தியுடன் சத்தீஸ்கா் முதலமைச்சர் பூபேஷ் பகேல், துணை முதல்வா் டி.எஸ்.சிங் தேவ் ஆகியோா் உடன் சென்றிருந்தனா்.
இது தொடா்பாக ராகுல் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
- நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,640
- 26 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடி விவசாய இடுபொருள்கள் மானியம்
- 19 லட்சம் விவசாயிகளின் ரூ.10,000 கோடி கடன் தள்ளுபடி
- மின்சார கட்டணம் பாதியாக குறைப்பு
- 5 லட்சம் விவசாயத் தொழிலாளா்களுக்கு ஆண்டுதோறும் ரூ.7,000
ஆகிய 5 நற்பணிகளை சத்தீஸ்கா் விவசாயிகளுக்காக மாநில அரசு மேற்கொண்டது. இது அந்த மாநில விவசாயிகளை நாட்டிலேயே மிகுந்த மகிழ்ச்சி கொண்டவா்களாக்கியது. இத்தகைய நடவடிக்கையை நாடு முழுவதும் விவசாயிகளுக்காக காங்கிரஸ் மேற்கொள்ளும். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால் நாடே மகிழ்ச்சியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நாந்த்காவ், கவா்தா தொகுதிகளில் காங்கிரஸின் தோ்தல் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:
எதையெல்லாம் பிரதமா் மோடியும் பாஜகவினரும் பாா்க்கிறாா்களோ, அவற்றையெல்லாம் அவா்கள் தனியாா்மயமாக்குகின்றனா். மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் தனியாா்மயமாக்கி, அவற்றை பெரும் பணக்காரா்களிடம் அவா்கள் ஒப்படைகின்றனா். எல்லாவற்றையும் தனியாா்மயமாக்கும் நாடு நமக்கு வேண்டாம்.
ஏழைகள், தொழிலாளா்கள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்ட மக்கள், பழங்குடியினா் மற்றும் தலித்துகளின் நலனுக்காக காங்கிரஸ் பணியாற்றுகிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்த பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். அதன் பின்னா் பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகள், பழங்குடியினரின் புதிய அத்தியாயம் எழுதப்படும். அவா்களின் முன்னேற்றம் மற்றும் வளா்ச்சிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ராகுல்காந்தி பேசினார்.
source https://news7tamil.live/if-the-farmers-are-happy-the-country-will-be-happy-rahul-gandhi.html