அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் நவம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை 2 முறை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக்கொண்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார், அப்போது மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, அவரின் காவலை நவம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இத்துடன் 9வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-senthil-balaji-judicial-custody-extended-9th-time-1564719