வியாழன், 26 அக்டோபர், 2023

சனாதன தர்மத்தின் மிகப்பெரிய அடையாளம்

அயோத்தி ராமர் கோயில் சனாதன தர்மத்தின் மிகப்பெரிய அடையாளம் என மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், காங். மூத்த தலைவருமான கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தின் சிந்த்வாரா தொகுதியில் ம.பி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவரும், முதல்வர் வேட்பாளருமான கமல்நாத் போட்டியிடுகிறார்.  வரும் தேர்தலை முன்னிட்டு சிந்த்வாரா தொகுதிக்கு வருகை தந்த கமல்நாத், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பாஜகவுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.  ராமர் கோயில் நமது தேசத்திற்கான கோயில்.  சனாதன தர்மத்தின் மிகப்பெரிய சின்னம் அது.  ஒரு வழியாக ராமர் கோயில் கட்டப்பட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.  அது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கானதாக மட்டும் இருக்க முடியுமா?

சமாஜ்வாதி கட்சியினருக்கு தொகுதி ஒதுக்குவதில் பிரச்னை இல்லை. அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் தான் பிரச்னை.  அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கினால்,  அது பாஜகவுக்கு சாதகமாக ஆகிவிடும் என கட்சியினர் கருதுகின்றனர்.


நான் சிந்த்வாரா தொகுதி மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அவர்கள் தொடர்ந்து என் பக்கம் நிற்கிறார்கள்.  வாக்குகளைத் தாண்டி,  அன்பையும் மரியாதையையும் அவர்கள் எனக்கு அளிக்கிறார்கள்.  சிந்த்வாரா தொகுதி மக்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள். அவர்கள் விரும்பினால் என்னோடு வந்து வாக்கு சேகரிக்கலாம்” என்று கூறினார்.



source https://news7tamil.live/ayodhya-ram-temple-is-the-biggest-symbol-of-sanatana-dharma-kong-interview-with-senior-leader-kamal-nath.html