ஞாயிறு, 15 அக்டோபர், 2023

முக்கிய பிரச்னைகளில் இருந்து திசை திருப்பவே மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது!” – சுபாஷினி அலி பேச்சு

 

நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் தந்திரமாக மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் காங். முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, கார் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் லெஷி சிங் – பீ, டெல்லி துணை சபாநாயகர் ராக்கி பிட்லன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், தேசியவாத காங். கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனி ராஜா, சமாஜ்வாடி எம்.பி டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி பேசியதாவது:

தேர்தல் அரசியலில் களம் இறங்குவதற்கு முன்பே சமூக, கலாச்சார மாற்றத்துக்காகப் போராடிய மு.கருணாநிதியின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் போற்றுவதற்காக நான் இன்று இங்கே வந்திருப்பது எனக்கு கிடைத்திருக்கும் பெரும் பேறு.

நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு நீண்ட காலம் முன்பே தமிழ்நாடு சமூக நீதிக்கான ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தை முன்னெடுத்தது. சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியின் வளர்ச்சியும் அநீதியான வர்ணாசிரம தர்மத்துக்கும் அதன் அடிநாதமாக இருந்த மனுவாதக் கொள்கைகளுக்கும் சவாலாக இருந்தன. பெரியார், இந்த இயக்கத்தின் முன்னணித் தலைவராக இருந்து பெண்களின் உரிமைகள் மற்றும் முழுமையான சமத்துவத்துக்காக சமரசம் செய்துகொள்ளாமல் போராடியவர்.
பெண்களுக்குச் சமமான சொத்துரிமை மட்டுமல்ல, குடும்பத்திலும் சமூகத்திலும் சம உரிமைக்காக போராடினார். பெண்களுக்கு இழைக்கப்படும் ஒடுக்குமுறைக்கு வேர்களாக மனுதர்மம் இருப்பதை அடையாளம் காட்டினார்.

இந்த சமூக நீதி, பெண்ணுரிமைப் போராட்டத்தில் நமது பொதுவுடைமை இயக்க முன்னோடித் தோழரான பி. ராமமூர்த்தி முக்கியப் பங்காற்றினார் என்பதில் நாங்களும் கூடுதல் பெருமிதம் கொள்கிறோம். மு. கருணாநிதி இப்படிப்பட்ட போராட்ட இயக்கத்தின் ஒரு சிறந்த வழித்தோன்றலாக திகழ்ந்தார். அவர் எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர், மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத் திறமையாளர். தனது திறமைகளை அவர் எந்த கல்லூரியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ பயின்றவர் அல்லர். போராட்டங்களில் பயின்றவர்.

மனிதாபிமானமற்ற மற்றும் அநீதியின் தளைகளிலிருந்து மொழி, கலாச்சாரம் மற்றும் மனிதர்களை விடுவிப்பதற்கான கருணாநிதியின் போராட்டம் அனைத்து துறைகளிலும் சவால்களை எதிர்கொண்டது. இந்தப் போராட்டங்கள்தான் அவரை திராவிட இயக்கத்தின் தலைமைப் பதவிக்கு அழைத்துச் சென்றது, அது தமிழ் மக்களின் இதயங்களையும் மனங்களையும் மட்டுமல்ல, அவர்களின் வாக்குகளையும் வென்றெடுப்பதில் வெற்றி பெற்றது.

குறுகிய காலத்தில் அவர் மாநிலத்தின் முதலமைச்சரானார். சமூக நீதிக்கான தனது இயக்கத்தின் வாக்குறுதிகளை அரசாங்கத்தின் கொள்கைகளாக மாற்றி எழுதுவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். பெண்களுக்கு சம உரிமைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான அணுகல் மற்றும் சுய மரியாதை திருமணங்களை பிரபலப்படுத்துதல் மற்றும் பகுத்தறிவு சிந்தனையை மேம்படுத்துதல் ஆகியவை இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். சமூக மற்றும் பாலின ஒடுக்குமுறைக்குப் பின்னால் இருக்கும் மனுதர்மத்தின் வேர்களும் நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ பொருளாதார சுரண்டல் அமைப்புகளும் பின்னிப்பிணைந்துள்ளதையும் அவை ஒன்றையொன்று வலுப்படுத்துவதையும் நாம் மறுக்க முடியாது. இவற்றில் ஒன்றை நீங்கள் பலப்படுத்தினால் இன்னொன்றும் பலப்படுகிறது. ஒன்றை வலுப்படுத்துவதன் மூலம் ஒன்றை பலவீனப்படுத்த முடியாது.

அனைத்து வகையான சுரண்டல்களின் கொடூரமான வளர்ச்சியை நமது அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்காத ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்தோடு செயல்படும் பாஜக அரசின் கீழ் இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம். மனுஸ்மிருதியை இந்த நாட்டின் சட்ட மற்றும் சமூக கட்டமைப்பாக ஆக்குவதில் அவர்கள் எப்போதும் உறுதியாக உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீதான சுரண்டல் மற்றும் அவர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருவதையும் நாம் பார்த்து வருகிறோம்.
அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறையில் இருக்கும்போதே மனுவாத நீதி நடைமுறைப்படுத்தப்பட்டு, குற்றவாளிகளின் சாதி அல்லது மதம் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் பில்கிஸ் பானு வழக்கில் கூடுப்பாலியல் வன்கொடுமை செய்தவர்களும் படுகொலை செய்தவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்கள் கொடுத்தும், தொடர் போராட்டங்கள் நடத்தியும் கூட குற்றவாளிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கின்றனர். ஹத்ராஸ் உ.பி.யில் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை செய்த உயர் சாதியைச் சேர்ந்த 4 பேரில் 3 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், மணிப்பூரில் மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டித்தனமான வன்முறையால் பாதிக்கப்பட்ட பழங்குடிப் பெண்களின் நீதிக்கான கூக்குரல்கள் 5 மாதங்களுக்குப் பிறகும் செவிமடுக்கப்படவில்லை.
இதெல்லாம் அரசமைப்பு சட்டம் இருந்தும் மனுவாதமே செயல்படுத்தப்படுவதற்கு சாட்சிகள்.

பெண்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில், பிஜேபி அரசு மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை இயற்றியிருக்கிறது. ஆனால் அந்த சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதை காலவரையின்றி ஒத்திவைக்கும்படியான நிபந்தனைகளை சேர்த்திருக்கிறார்கள்.
இது நமது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திமுக போன்றவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அடியாகும். நாம் பெண்களின் இட ஒதுக்கீட்டுக்காக 27 ஆண்டுகளாக ஒன்றிணைந்து போராடி வருகிறோம். ஆனால் இப்போது நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் தந்திரமாக இந்த சட்டம் இயற்றப்பட்டு, பெண்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான இந்த அரசாங்கத்தால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.

இப்படிப்பட்ட இந்த நிலையிலேதான், இப்போது மாற்றத்துக்கான காற்று நம்மை நோக்கி வீசத் தொடங்கியிருப்பதை நாம் உணர்கிறோம். மனுவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் சமூக, பொருளாதார மற்றும் பாலின நீதி ஆகிய பிரச்சனைகள் மீண்டும் மையத்தை நோக்கித் திரண்டு வந்திருக்கின்றன. கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் மாற்றத்துக்கான கொள்கைகள், தமிழ்நாட்டின் வலுவான திராவிட இயக்கம், சாதிவாரி கணக்கெடுப்புக்காக அதிகரிக்கும் கோரிக்கைகள், இடஒதுக்கீடு மீதான தன்னிச்சையான உச்சவரம்பு நீக்கம் ஆகிய அனைத்தும் இந்த இயக்கத்தை வலுப்படுத்துகின்றன. பாலின நீதி, சமூக நீதி, பொருளாதாரச் சுரண்டலில் இருந்து விடுபடுதல் மற்றும் நாட்டில் இருக்கும் ஏழைகளின் முக்கியப் பிரச்சனைகள் ஆகியவை இந்தப் போராட்டத்தின் முக்கிய கூறுகளாக மாற இந்தியப் பெண்களாகிய நாம் கடுமையாகப் போராட வேண்டும். இந்தப் போராட்டத்தில் நமக்கு கருணாநிதி உந்து சக்தியாக இருப்பார்.

நிறைவாக அச்சமற்ற, ஓர் நெருப்புப் பத்திரிக்கையாளராக கருணாநிதி ஆற்றிய பங்கை நினைவு கூற விரும்புகிறேன். இன்று பத்திரிக்கை சுதந்திரத்தைப் பொறுத்தவரை இந்தியா எங்கே நிற்கிறது என்பதை அறிந்தால் ஓர் பத்திரிகையாளராக கருணாநிதி மிகவும் வருத்தப்பட்டிருப்பார். கொல்லப்பட்ட மற்றும் காயப்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்காகவும், துன்புறுத்தப்பட்டவர்களுக்கும், அச்சுறுத்தப்பட்டவர்களுக்கும், பொய்யான குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்படும் நியூஸ் கிளிக்கில் உள்ள நமது நண்பர்களைப் போன்றவர்களுக்கும் நீதி கேட்டு பெரும் போராட்ட இயக்கத்தை அவர் வழிநடத்தியிருப்பார்.
கருணாநிதியின் வழிகாட்டுதல் நிச்சயமாக நம் அனைவருக்கும் போராடி வெற்றி பெறுவதற்கான வலிமையைத் தரும்.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி பேசினார்.


source https://news7tamil.live/the-womens-reservation-act-was-brought-to-distract-from-the-main-issues-subashini-ali-speech.html