வியாழன், 26 அக்டோபர், 2023

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் – அல் ஜசீரா பத்திரிகையாளரின் மனைவி, குழந்தைகள் உயிரிழப்பு!

 இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் அல் ஜசீரா பத்திரிகையாளரின் மனைவி  மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் நடந்த சண்டையில் 1,756 குழந்தைகள் உட்பட குறைந்தது 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  மேலும் 13,561 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோல இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 20வது நாளாக நடைபெற்று வரும்  போரில் இருதரப்பில் இருந்தும் சுமார் 8000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அக்டோபர் 7ம் தேதி நடந்த தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்டு 210 பேரைக் கைப்பற்றிய பின்னர்,  சுமார் 1,500 ஹமாஸ் போராளிகளைக் கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாக செயல்படும் அல் ஜசீரா தொலைக்காட்சி இஸ்ரேல் – பாலஸ்தீனம் குறித்த பல முக்கியமான தகவல்களை நேரலையில் தந்து கொண்டிருந்தது.  அல் ஜசீரா தொலைக்காட்சியின் அரபு மொழி சேனலில் பணிபுரிபவர் பாலஸ்தீனத்தை சேர்ந்த வாயீல் அல் தஹ்து.  இவர் அல் ஜசீரா அரபு மொழிப் பிரிவில் தலைமைச் செய்தியாளாரக பணிபுரிகிறார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாலஸ்தீனத்திலிருந்து அல் ஜசீரா அரபு மொழிக்காக நேரலையில் வாயீல் அல் தஹ்து செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார்.  இந்த நிலையில் வாயீல் அல் தஹ்துவின் மனைவி மற்று இரண்டுகள் குழந்தைகள் இஸ்ரேலின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனத்தின் அல் அக்ஸா மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த வாயில் அல் தஹ்து தெரிவித்ததாவது…

“எங்களது பகுதிகளில் வெளியேறுமாறும் இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது.  மேலும் இஸ்ரேலிய ராணுவம் பாதுகாப்பான பகுதி என்று கூறிய இடத்தில்தான் பெண்களும் குழந்தைகளும் தஞ்சம் அடைந்தனர்.  ஆனாலும் அவர்களைத் நோக்கி வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

குழந்தைகள்  பெண்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறி வைத்து இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்படுகிறார்கள்.  இஸ்ரேல் ராணுவம் குழந்தைகளை கொல்லும் கொலைகாரர்கள்.  வேறெதுவும் சொல்வதற்கில்லை” என கண்ணீர்மல்க வாயீல் அல் தஹ்து தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/israeli-airstrike-aljazeera-journalists-wife-children-killed.html