புதன், 25 அக்டோபர், 2023

ஹமூன் புயல்: வங்கதேசத்தில் 2 பேர் உயிரிழப்பு: 2,75,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!

 ஹமூன் புயல்: வங்கதேசத்தில் 2 பேர் உயிரிழப்பு: 2,75,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்! 25 10 23

வங்க தேசத்தில் ஹமூன் புயல் கரையை கடந்து வருவதால் இதுவரை  2 பேர் உயிரிழந்துள்ளனர்.  சுமார் 2,75,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள  காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று புயலாக மாறியுள்ளது.  இந்தப் புயலுக்கு ஹமூன்’ எனப்
பெயரிடப்பட்டுள்ளது.  ஹமூன் புயலானது  வங்கதேசத்தின் கடலோரப் பகுதியில் உள்ள கரையை கடக்கும் என தெரிவிக்கபட்டது.

அதன்படி ஹமூன் புயல் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி வங்கதேசத்தின் சிட்டகாங்கிற்கு  கிழக்கு-தென்கிழக்கே 40 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 06 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்கும்” என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்க உள்ளதால், மத்திய கிழக்கு வங்கக் கடல் இன்று மாலை வரை கொந்தளிப்புடன் இருக்கும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் ஹமூன் புயல் கரையை கடக்க தொடங்கியதால் பலத்த காற்றுடன் சூறாவளி வீசியது. இதனால் வங்கதேசத்தில் ஹமூன் புயலுக்கு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 2, 75, 000 மக்கள் பாதுகாப்பாக இடங்களில் தங்க வைக்கபட்டுள்ளதாக வங்கதேச பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான புயல் காரணமாக பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும், மின்சார வயர்கள் அறுந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வங்க தேசத்தில் தெற்கு கடற்கரை பகுதியான சுமார் பத்துலட்சம் ரோஹிங்கிய அகதிகளின் முகாம் உள்ளது. இந்த புயலால் ரோஹிங்கிய அகதிகளுக்கு பெரிதளவு பாதிப்பு இல்லை என வங்கதேச பேரிடர் மேலாண்மை அதிகாரி கம்ருல் ஹசன் தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/cyclone-hamoon-2-people-killed-in-bangladesh-275000-people-evacuated-to-safe-places.html